.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

September 20, 2014

குருபூஜை - அரசியல்வாதிகள் கவனத்திற்கு.


'பொதுநலன் கருதி அரசியலுக்கு அப்பாற்பட்டு, குருபூஜைகளில் பங்கேற்பதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்' என ஐகோர்ட் நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்திருக்கிறார். தங்கள் சாதிய தலைவர்களுக்காக நடத்தும் குருபூஜைகளால், தென் தமிழகம் பல்லாண்டு காலமாக அமைதியை தொலைத்து வந்திருக்கிறது. தலைவர்களுக்கு இப்போது நடத்துகிற குருபூஜை விழாக்கள், ஜெயந்தி விழாக்கள் போதாது என்று, அதனால் உருவாகிற அனர்த்தங்களும் போதாது என்பது போல புதியதாக ஒருவரின் குருபூஜைக்கு அவர் மகன் அடிக்கோலிட...

இது குறித்த வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை பார்ப்போம். "குருபூஜை' என்ற பெயரில் நடத்தும் விழாக்களால் தமிழக மக்கள் 'போதும்...போதும்' என்ற அளவிற்கு சிரமப்பட்டுள்ளனர். புதிதாக குருபூஜை கொண்டாடுவதை தமிழகம் தாங்காது. புதிதாக குருபூஜைகளை அனுமதித்தால், அமைதி கெடும்; சட்டம்- ஒழுங்கு பாதிக்கும். இவைகளை இரும்புக்கரம் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும்.

 மனுதாரர், போலீஸ் விதித்துள்ள நிபந்தனைகளை எதிர்த்து மனு செய்துள்ளார். ஏற்கனவே தென் மாவட்டங்களில் சமூக மோதல், பதட்டம் அதிகம் உள்ளது; கமுதி மிக பதட்டமான பகுதி. 'பூஜையில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்தான் பங்கேற்க வேண்டும்' என போலீசார் சில வரைமுறைகளை விதித்தது சரியே. 'விழா நடத்த வேண்டாம்' என போலீசார் கூறவில்லை;

'அமைதியாகவும், உள்ளூர் மக்கள் மட்டும் கொண்டாடலாம்' என தெரிவித்துள்ளனர். சம்பந்தமில்லாத நபர்கள் வந்தால், நிலைமை மோசமாகும். இதனால் போலீசார் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். 'சட்டம்-ஒழுங்கு பாதிக்கும்' என போலீசார் நடவடிக்கை எடுத்தால், கோர்ட் தலையிட முடியாது. ஏற்கனவே, இக்கோர்ட்டின் சில வழிகாட்டுதல்களை போலீசார் பின்பற்றியதால், குரு பூஜைகளின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் இல்லை;

உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சி. குரு பூஜைகளை மிகப்பெரிய அளவில் கொண்டாட அனுமதிப்பதில், மிக கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். புதிதாக குரு பூஜைகளுக்கு அனுமதி அளிப்பதில், மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மதுக்கடைகள் பல பிரச்னைகளுக்கு காரணமாகின்றன. குருபூஜைக்கு இரு நாட்களுக்கு முன்னும், பின்னும் மதுக்கடைகளை மூட வேண்டும்.

குரு பூஜைகளுக்கு அரசியல் தலைவர்கள் முக்கியத்துவம், அங்கீகாரம் அளிப்பதால், அதற்கு மேலும் விளம்பரம் கிடைக்கிறது. மக்கள் நலன் கருதி, குருபூஜைகள் நடக்கும் இடங்களுக்கு அரசியல் தலைவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்ப்பதன் மூலம் மக்களுக்கு சேவை செய்வது போல் ஆகிறது. பொதுநலன் கருதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, குருபூஜைகள் நடக்கும் இடங்களுக்கு செல்வதை, அரசியல் தலைவர்கள் தவிர்ப்பார்கள் என இக்கோர்ட் எதிர்பார்க்கிறது. மனு 'பைசல்' செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

அரசியல்வாதிகள் - எதிர்காலத்திலாவது இத்தகைய ஜெயந்தி விழாக்களை தவிர்ப்பது நல்லது. தொண்டர்களும், சாதிய தலைவர்களின் அபிமானிகளும் நீதிபதி சொல்வதை காது கொடுத்து கேட்கிறார்களோ இல்லையோ - அரசியல் தலைவர்கள் கேட்டாக வேண்டும் - அவசியம். எதற்காக அரசியல் தலைவர்கள் குருபூஜை விழாக்களில் பங்கெடுக்கின்றிர்கள். அந்த சாதி தலைவர் கொள்கைகள் பிடித்தா? நிச்சயம் கிடையாது. அந்த சாதி மக்களின் வாக்குகளை பெற.

சரி. ஜெயந்தி விழாக்களில் பங்கெடுப்பதால் மட்டும், உங்கள் கட்சிக்கு வாக்குகள் விழவா போகிறது. தேர்தலில் தோற்று, சாதி வெறிக்கு துணை போனதான பேச்சு தான் மிச்சம். நீங்கள் கலந்து கொள்ளும் அளவுக்கு அந்த சாதி தலைவர்கள் யோக்கியதயை பெற்றிருந்தார்களா? இல்லை தானே. ஒரு தலைவரின் ஜெயந்திவிழாவுக்கு மரியாதையுடன் செல்ல நினைப்பவர்கள் எப்படி போக வேண்டும். முழு போதையிலா. தம் தலைவனுக்கு மரியாதை செலுத்த கூட மரியாதை இல்லாமல் போகிறார்கள்.

 அதில் கூட சுயக்கட்டுபாடு இல்லாமல் - மது கடைகளை வலுக்கட்டாயமாக மூட வேண்டி உள்ளது. பொது சொத்துக்களை சேதம் விளைவித்து இன்பம் காண்கிறார்கள். பல நேரங்களில் தங்கள் இன்னுயிரையும் இழக்கிறார்கள். சாதிய தலைவர்களின் குருபூஜைகளால் நிகழும் வன்முறையை சமூகநீதி பேசும், சாதியை ஒழித்த சமர்புலிகள் கூட கண்டிக்க மறுக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தால் அவ்வாறு இருக்க முடியாதே. சரியாக தான் செயல்பட்டுள்ளது. பார்ப்போம் - இந்த வருஷ குருபூஜைகளை எத்தனை அரசியல்வாதிகள் தவிர்க்கிறார்கள் என்று.

LinkWithin

Related Posts with Thumbnails