.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

September 2, 2010

முற்போக்கு மற்றும் பகுத்தறிவுகளின் பாசாங்கு...

முற்போக்காளர்கள் என்றும், பகுத்தறிவாளர்கள் என்றும் தங்களை சொல்லி கொள்பவர்களின் சொல்லும், செயலும், அவர்களின் ஊடகங்களும் - உண்மையாகவே முற்போக்குடனும், பகுத்தறிவுடன் தான் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். சுய விருப்பு வெறுப்பற்று தம் கருத்துகளை, தம் பணிகளை செய்ய வேண்டியவர்கள், விருப்பு, வெறுப்புடன் - ஒன்றை ஆதரித்து பேசுவதும், ஒன்றை எதிர்ப்பதும் பகுத்தறிவுக்கோ அல்லது முற்போக்குகளுக்கோ அழகல்ல.

இருவருக்குமே எப்போதும் எதிர்த்து கொண்டே இருக்க சில பொதுவான எதிரிகள் இருக்கிறார்கள். நூறு வருஷம் ஆனாலும் அவர்கள் எதிர்க்கப்பட்டு கொண்டே இருப்பார்கள். இவர்கள் எதிர்த்து கொண்டே இருப்பார்கள். உடம்பிலுள்ள எல்லா வலிகளுக்கும், ஒரே வலி நிவாரணி மாத்திரை எப்படி பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள். பகுத்தறிவுகள் எதிர்ப்பதற்கு - பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்கசக்திகள். முற்போக்காளர்கள் எதிர்ப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம். அவர்களிடம் காணப்படும் சில முரண்பாடுகளையும், அவர்கள் ஏன் இப்படி முரண்பாடாளர்களாகவே இருக்கிறார்கள் என்றும் பார்ப்போமா.

முதலில் பகுத்தறிவை பார்ப்போம். பகுத்தறிவு என்பது சாதீயத்துக்கும். மதத்துக்கும் அப்பாற்ப்பட்டது. ஆதிக்க சக்திகளை எதிர்க்க புறப்பட்டது. ஆனால் ஆதிக்க சக்திகளாக, அடக்குமுறையாளர்களாக கூட்டணி கட்சியே இருக்கும் பட்சத்தில் வாயை திறக்க முடியுமா. அதே நேரம் வாயை மூடி கொண்டும் இருக்க முடியாது . திறந்தாக வேண்டுமே. பொதுவான எதிரியை எடு. பார்ப்பான் எதிர்ப்பு எனும் பல்லவியை மட்டும் பாடு. ஆரியன் எதிரி. திராவிடன் சகோதரன். எதிரியை விட சகோதரன் தானய்யா, பல சமயங்களில் பாடாய் படுத்துகிறான். அதற்காக வாய் திறக்க மாட்டார்கள்.

எளிய மக்களை, எளிய மக்களாகவே வைத்திருக்கும் சூட்சுமத்தை ஆரியனுக்கு பிறகு, இன்று ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். ஆனால் இன்றைய எதிரியை கண்டும் காணாமல் விட்டு விட்டு, நேற்றைய எதிரியை பிடித்து எல்லாம் உன்னால் தானடா என்று சொல்லி, புதிய தவறுகளையும், புதிய ஆதிக்கங்களையும், சுயநலத்துக்காக வளர்த்தால் - நமக்கும் பார்ப்பானுக்கும் என்னய்யா வித்தியாசம். கற்றுணர்ந்த பெரியவர்களால் (நமது பகுத்தறிவு கழகங்களை சேர்க்காதீர்கள்) மதுவின் தீமை குறித்து எவ்வளவோ சொல்லப்பட்டும், கண்டும் காணாமல் இருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.

காங்கிரஸ்காரனாக இருந்தவரை மதுவை எதிர்த்த பெரியார், திராவிடனாக மாறிய பிறகு எதிர்க்க வில்லை. அளவாய் குடித்தால் தப்பில்லை என்கிறார். மனிதனை பகுத்தறிவு என்கிற கட்டத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பது இரண்டு, ஒன்று மத போதை மற்றது மது போதை. ஒன்றை எதிர்க்கின்ற நீங்கள் ஏன் மற்றதை எதிர்க்க தயங்குகிறிர்கள். மது தொழிற்சாலை நடத்துபவர்களே தானே தயங்கவேண்டும். குடித்து நாசமாக போகட்டும் என்ற நல்லெண்ணமா.

இந்திய சுதந்திர தினம் குறித்த விமர்சனத்தில், டெல்லியை ஆதிக்கசக்தியாக காட்டி விட்டு, சென்னையை தப்ப விட்டு விட்டிர்கள். டெல்லிக்கு பொருந்துவது சென்னைக்கு பொருந்தாதா. ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வந்தால் தான் போராட்டம் செய்வீர்களா. இந்த விஷயத்தில் இவர்களை விட மோசமானவர்களாக இருக்கிறார்கள் முற்போக்காளர்கள்.

இந்திய சுதந்திரம் குறித்த சில எதிர்மறை பார்வையை வைத்து விட்டு (அதிலுள்ள உண்மைகளை நாம் ஏற்று கொள்கிறோம். ஆனால்) இன்றளவும் அடக்கு முறையாளர்களாக உள்ள செம் படையையும், அவர்களின் போராட்டத்தையும் சிலாகிக்கிறார்கள். இங்கே உட்கார்ந்து கொண்டு இங்கே உள்ள கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டு சீன சுதந்திரத்தை சிலாகிக்கிறார்கள். அங்கே உட்கார்ந்து கொண்டு இந்தியாவை சிலாகித்து எழுத முடியுமா. தூக்கில் தொங்க வேண்டும். என்ன முற்போக்கு சிந்தனை.

வாழும் மண்ணிற்கு விசுவாசம் இல்லாததால் தான் உங்களால் இப்படி எழுத முடிகிறது, காங்கிரஸால் அணுசக்தி ஒப்பந்தம் போட முடிகிறது. அமெரிக்கா பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது - பிற நாடுகளுக்கு. அதை எதிர்க்கிறிர்கள். நல்லது. அதே காரியத்தை சீனன் செய்யும் போது, முற்போக்கு மூளை ஏன் வேலை செய்வதில்லை. அணுசக்தி ஒப்பந்தந்தால், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தென்று (உங்களுக்கு இறையாண்மை என்பது கெட்ட வார்த்தையாயிற்றே) கூச்சலிடும் நீங்கள், எல்லையில் சீனா செய்யும் வேலைகளை கண்டும் காணாமல் விட்டு விடுவது ஏன்.

உங்களுக்கும் பி.ஜே.பிக்கும் ஒரு வித்தியாசமில்லை. பி.ஜே.பி பாக் மற்றும் சீனா என்றால் எதிர்ப்பார்கள். அமெரிக்கா என்றால் அடங்கி கொள்வார்கள். நீங்கள் அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பா என்றால் ஏகாதிபத்தியம் பேசுவீர்கள். சீனா என்றால் வாய் திறவாது. அன்னிய முதலீடு ஆபத்து, அதை தடுக்க கோரி தான் நாளந்தம் எத்தனை எத்தனை போராட்டங்கள்.

ஆனால் உள்ளுர் உற்பத்தியை பெருமளவு தகர்க்கும் சீன பொருட்களுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தி இருப்பீர்களா. பெப்சி குடிக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள், சீன பொருட்களை உபயோகிக்காதீர்கள் என்று சொல்லாதது ஏன். சீனா பங்காளி. அமெரிக்கன் பகையாளி. சரியாக சொல்வதென்றால், முற்போக்கு பிற்போக்காகவும் - பகுத்தறிவு, பகுத்தறிவு இன்றியுமே செயல் படுகிறது. அடுத்தடுத்த பதிவுகளில் மேலும் சில முரண்களை பார்ப்போம்.
தொடர்புடைய பதிவுகள் :


0 comments:

Post a Comment

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails