.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

September 20, 2010

ஆனந்தவிகடன் ஆசிரியர் கைது விவகாரம்..

ஆனந்தவிகடன் ஆசிரியர் கைது விவகாரம்...

இவ்வார ஆனந்தவிகடனில் "காலப்பெட்டகம்"பகுதியில், 1987ல் ஆனந்த விகடனின் அப்போதைய ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன், அரசியல்வாதிகளை இழிவு படுத்தி ஒரு ஜோக் வெளியிட்டமைக்காக, அன்றைய அதிமுக அரசின் சபாநாயகரின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்ட செய்தியை வெளியீட்டு இருந்தது. படுதலம் சுகுமாரன் என்பவர் (பின்னாளில் இவர் விகடனில் வேலைக்கு சேர்ந்தார்) இப்படி ஒரு ஜோக் எழுதினார்.

 "மேடையில இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி..? "
"ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர் தான் மந்திரி...!"

சென்ற வருஷம் நடிகைகளை விபச்சாரிகளாக சித்தரித்து செய்தி வெளியிட்டதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இந்த ஜோக்கை படித்த அன்றைய சபாநாயகர், விகடனின் ஆசிரியரை கைது செய்ய உத்தரவிட்டார். சபாநாயகரின் உரிமை எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நிருபித்து காட்டினார். விகடன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

வழக்கம் போல் பத்திரிகையாளர்கள் கூச்சலிட்டார்கள். பிறகு அன்றைய முதல்வர் புரட்சி தலைவர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டார். இது குறித்து விகடன் காலப்பெட்டகத்தில் இப்படி...

"மகத்தான பத்திரிகை ஒற்றுமைக்கு நன்றி! விகடன் அட்டைப்பட ஜோக் தொடர்பாக, தமிழக சட்டசபை எனக்கு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை வழங்கி, சென்னை மத்திய சிறையில் அடைத்த செய்தி கேட்டு உணர்ச்சி வயப்பட்ட அத்தனை பேருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்... விகடன் மீது எடுத்த நடவடிக்கை இந்திய பத்திரிகைகளின் சுதந்திரத்தையே பறிப்பதாகும் - என்கிற உணர்வோடு மக்களும், பத்திரிகைகளும் கொதித்து எழுந்தமையால் தான் அரசு என்னை உடனடியாக விடுவித்தது... என்று தொடங்கும் தலையங்கத்தில், ஆதரவு தெரிவித்த தி.மு.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், கி.வீரமணி, பழ.நெடுமாறன், ப.சிதம்பரம், பத்திரிகையாளர் சோ என பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஆசிரியர். தலையங்கத்தின் இறுதி வரிகளில்... தண்டனையும், சிறையும் என்னைத் துளியும் காயப்படுத்தவில்லை. மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை மூன்று நாட்களுக்குள் - குறைப் பிரசவம் ஆனாலும், அது பத்திரிகை சுதந்திரத்தையே காயப்படுத்தியிருக்கிறது. இந்த வடு என்றைக்கும் மாறாது, அழியாது" என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டதாக பொக்கிஷம் பகுதியில் வாசித்தோம்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மூச்சுக்கு முன்னூறு முறை விகடனை பார்ப்பான், பார்ப்பான் என்று திட்டும் கி.வீரமணி, பத்திரிகையாளர்களை அன்பாக மிரட்டும் கலைஞர் போன்றவர்கள் விகடனுக்கு ஆதரவாக இருந்தது தான். எதிரிக்கு எதிரி நண்பன் தான். வேறென்ன... பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுபவர்களின், பத்திரிகை அலுவலகத்திலேயே சுதந்திரம் இல்லை என்று தான் "ஓ" பக்கங்கள் ஞானி பத்திரிகை பத்திரிகையாக மாறுகிறார்.

அதன் பிறகு, இந்த இருபத்தி நான்கு வருஷத்தில் வேறு பத்திரிகையாளர்கள் எவரேனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா. ஜெயலலிதாவின் முதல் ஆட்சி காலத்தில், சாவி பத்திரிகையாசிரியர் ஆபாச ஜோக் வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டார். மலிவான செய்திகளை வெளியிடும் புலனாய்வு பத்திரிகைகளை நாம் சேர்க்கவில்லை- இதில்.

இப்போதெல்லாம், அவதூறான செய்தி வெளியிட்டால் ஆற அமர கைது நடவடிக்கை எல்லாம் கிடையாது. நேரடி ஆக்ஷன் தான். அந்த ஆக்ஷன் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை மக்களுக்கு. நாளந்தம் பத்திரிகைகள் வாங்கும் அடியே சொல்லும்.

இந்த இருபத்தி நாலு வருஷத்தில் எல்லாமே மாறி இருக்கிறது அல்லது கெட்டு குட்டி சுவராய் போய் இருக்கிறது எனலாம். அரசியல், சினிமா, அச்சுஊடகங்கள் என்பவையும் மாறி விட்டன. பத்திரிகைகளில் இன்றைய உண்மையான நிலை பற்றி இங்கே  இங்கே வாசியுங்கள். கள்ளக்காதலுக்காக, சாமியார்களின் செக்ஸ்காக வரும் பத்திரிகை போல் தான் உள்ளது புலனாய்வு துறை பத்திரிகைகள். அதீத ஆபாசத்திற்காக பத்திரிகை துறை மீது நடவடிக்கை எடுக்க துவங்கினால் நிறைய பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்பதே யதார்த்த உண்மை.

 பத்திரிகைகள் இன்று பண்பலை, தொலைக்காட்சி , தொலைக்காட்சி தொடர்கள், இணையத் தளங்கள் என்று பல வியாபாரத்தில் கால் பரப்பி கொண்டு வரும் போது, அச்சுத்துறையையும் ஒரு வியாபாரமாக தானே பார்ப்பார்கள். வியாபாரத்துக்கு என்ன தேவை பரபரப்பு, கவர்ச்சி, ஜிகினா வேலைகள். அவ்வளவு தான். இதில் மக்கள், அவர்களின் பிரச்சனைகள் குறித்து பேச இடம் ஏது.

 எப்போதும், பத்திரிகையாளர்கள் தேவையற்ற விஷயத்தை வெளியீட்டு, அதனால் தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களே ஒழிய - ஒரு போராளியாக இருந்து, மக்களுக்கான பிரச்சனையில் பங்கெடுத்து அதனால் கைதானதாக வரலாறு இல்லை (சவுக்கை போல்) சவுக்கை பற்றி எழுதுவதற்கு கூட பத்திரிகை சுதந்திரம் இடம் தரவில்லையே.
தொடர்புடைய பதிவுகள் :


0 comments:

Post a Comment

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails