.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

May 4, 2011

தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெருகி உள்ளதா?

சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.காவின் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒருவர் எழுதி இருந்தார். அதற்கு காரணம் கற்பித்து, ஒருவர் அளித்த பின்னூட்டமும், அதற்கான நமது கருத்துமே இந்த பதிவு. முதலில் பின்னூட்டம்.

 "உண்மையினை உரக்கச் சொல்லியிருக்கிரிர்கள்.. 30 ருபாய் சம்பளத்திற்கு பீகாரில் இருந்து தமிழகம் வருகிறான் வடஇந்தியன். இதற்கு என்ன அர்த்தம். இங்கே வாய்ப்பிருக்கிறது, வேலை இருக்கிறது.. வாய்ப்பையும் வேலையினையும் உருவாக்குகிறோம் என்பது நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதன் பிரதிபலிப்பே. பீகாரில் இருப்பவனுக்குத் தெரிகிறது நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று... இங்கே உள்ளவர்களோ அதை கவனிக்காமல் பிதற்றுகிறார்கள். உண்மையே. திமுகவின் ஆட்சித் தொடரும்.. உங்கள் பதிவை ஏற்றுக்கொள்கிறேன்.. " என்று எழுதி இருக்கிறார்.

சாதாரண பின்னூட்டமாக, இதை கருதி விட முடியாது. காரணம் - சற்றே ஆராய வேண்டும். அவர் சொன்ன கருத்து உண்மையாக இருப்பின், அவரோடு சேர்ந்து நாமும் மகிழலாம். "நம் மாநில மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு தந்து _ பிற மாநில மக்களுக்கும் வேலை தருகிறோம். நாம் எவ்வளவு பெரிய ஆள்" என்று. ஆனால் உண்மை -அதுவல்லவே. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது, எந்த அளவுக்கு முரண் உள்ளது என்பதை பார்க்க வேண்டுமே.


முதலில் இரண்டு உண்மைகளை, பார்த்து விடுவோம். "பீகாரில் இருந்து தினக்கூலி முப்பது ரூபாய்க்கு ஒருவன் இங்கே வருகிறான்" என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரம் "பீகாரில் தினசரி முப்பது ரூபாய் சம்பாதிக்கிற சாத்தியம் கூட இல்லை" என்பதும் உண்மை. இனி நம் கேள்விகளுக்கு, விமர்சனத்திற்கு வருவோம்.

வேலை வாய்ப்புகள், தமிழகத்தில் பெருகி இருப்பதால் தான் - பிற மாநிலத்தில் இருந்து கூலி தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி வருகிறார்கள்" என்கிறார்கள். வேலை வாய்ப்பு பெருகி இருப்பது சாத்தியமெனில், வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்கு சென்று அல்லல் படுவதேன். சில வாரங்களுக்கு ஒரு முறை - வெளிநாட்டிலிருந்து நொந்து நூலாகி வரும் தமிழர்களை பார்க்கிறோம்.

அவர்களிடம், "ஏன் வெளிநாட்டிற்கு போனீர்கள்" என்று கேட்டால், "இங்கே வேலை இல்லை" என்பதே பதிலாக உள்ளது. சில தினங்களுக்கு முன் கூட, அரபு நாடொன்றில் கொத்தடிமைகளாக சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் படி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதையும் காண முடிந்தது. அதிகப்படியான வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் இருப்பின், கட்டிடத் தொழிலாளர்களாக, பிளம்பர்களாக வெளிநாட்டுக்கு செல்வது ஏன்.

"பீகாரிக்கு முப்பது ரூபாய் கொடுத்து முடிக்கின்ற வேலையை - தமிழனாக இருந்தால் முன்னூறு ரூபாய் கொடுத்தால் தான் முடிக்க முடியும்". அதோடு, வேலைக்கு -பத்து மணிக்கு வந்தால் ஆறு மணிக்கு கிளம்பி விடுவான் நம்ம ஆள். பீகாரியை அதிகப்படியான நேரம் வேலை வாங்க முடியும். இது போக, டாஸ்மாக் அதிகமாக உள்ளே போனால், மறுநாள் விடுமுறை எடுப்பான் நம்ம ஆள். வேலை அப்படி, அப்படியே நிற்கும்.

இப்போது இங்கே - பணியாட்கள் தேவைப்படவில்லை. கொத்தடிமைகள் தான் தேவைப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள்... முதலாளிகள் யாரை வேலைக்கு வைக்க விரும்புவார்கள். தமிழர்களையா... பிற மாநிலத்தவர்களையா... இங்கே அதிகப்படியான வேலை வாய்ப்பு இருந்து, நம் மக்களால் பார்க்க முடியாத அளவு வாய்ப்பு இருந்து, பிற மாநிலத்தவர்கள் இங்கே வேலைக்கு வந்தால் தமிழகத்துக்கும் பெருமை... ஆட்சியாளர்களுக்கும் பெருமை...

இந்த பதிவு - நம் மாநிலம், நம் மக்கள் என்கிற குறுகிய பார்வை பார்த்து பட்டதல்ல. உண்மையை ஆராய்கிறது... அவ்வளவே. இங்கே உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பை மறுத்து, இங்கே இருப்பவர்களை வேலைக்கு வைத்தால் - அதிகம் கூலி கொடுக்க வேண்டுமே என்பதற்காக - கொத்தடிமைகளாக பிற மாநிலத்தவர்களை வேலைக்கு வைத்தால், அதில் மாநிலத்துக்கோ, அரசுக்கோ எந்த பெருமையும் இல்லை. சிறுமை தான்.

ஒரு மாநில வளர்ச்சிக்காக, அரசாங்கம் போடும் திட்டங்கள் - முதலில் அம்மாநில மக்களுக்கு பயன்பட வேண்டும். ஒரு வேளை, "ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி" மற்றும் தமிழகத்தில் அள்ளி கொடுக்கப்படும் இலவசங்கள் போல், பிற மாநிலத்திலும் தரப்பட்டால் - இடம் பெயர்வு நடக்காதோ என்னவோ. முக்கியமாக, இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் ஒன்று உள்ளது.

சில வேலைகளுக்கு, தமிழர்களால் செய்ய முடியாது என்று பிற மாநிலத்தவர்கள் வரவழைக்க ப்படுகிறார்கள். அது நம் கையை வைத்தே, நம் கண்ணை குத்துவது போல. அதில் முதன்மையாக இருப்பது, நகைத்தொழில். "பெங்காலிகளும், மலையாளிகளும் தமிழர்களின் வயிற்றலடித்து - அந்த துறையில் இன்று கோலோச்சுகிறார்கள்" என்பதை பொற்கொல்லர்கள் சொல்லக் கேட்கும்போது வேதனையாக உள்ளது.

"தமிழகத்தில் நசிந்து வரும் தொழில்கள்" குறித்த ஒரு கட்டுரைக்கு தமிழகத்தை சுற்றிய போது, பல உண்மைகளை உணர முடிந்தது. தமிழகத்தில் பல தொழில்கள் நசியவில்லை. தமிழர்கள் தான் அந்த தொழிலில் இருந்து நசுக்கப்படுகிறார்கள். விளைவு, வேலை வாய்ப்பிருந்தும் வேலை தேடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழர்களை பாராட்டவேண்டும். "பிறர் வாழ தங்களை அழித்து கொள்பவர்கள்"... ஏன் எனில் நமக்கு சாதனைகள் முக்கியமாற்றே.
தொடர்புடைய பதிவுகள் :


0 comments:

Post a Comment

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails