.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

November 14, 2011

ஜெ அம்மாவுக்கு, வேலை இழப்பும், வேதனை வாழ்க்கையும்...அம்மா ஜெயலலிதாவுக்கு,

ஒரு மனிதன் தனது நடுத்தர வயதில் வேலையை இழக்கின்ற அவலத்தை போல் - வேறு பெரிய கொடுமை ஏதும் கிடையாது. அதை உணர்ந்தால் மட்டும் - அந்த கொடுமையை அறிய முடியும். இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள்- அந்த கொடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கொடுமையை முற்றிலும் உணராதவராய் அல்லது விழித்து கொண்டே தூங்குவது போல பாவனை செய்பவராய் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி, மற்றும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மலைச்சாமி இருக்கிறார்.

சற்றும் இரக்கமின்றி, "அவர்கள் தி.மு.க கட்சியினர். அதனால் எப்படி போனால் என்ன" என்கிற ரீதியில் - புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசுகிறார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் - தி.மு.க கட்சிக்காரர்கள் என்கிற வாதம் தொடர்ந்து பலராலும் மறுக்கப்பட்டே வருகிறது. சரி -அப்படியே இருந்தால் தான் என்ன. அப்படி பார்த்து கொண்டே போனால் - எந்த ஆட்சியிலும் யாருக்கும் வேலையே தரமுடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், அப்போதைய ஆளுங்கட்சிக்காரர்கள் கையூட்டு வாங்கி கொண்டு வேலைகளை வழங்குவது எப்போதும் உள்ளது.

அவர்களை எல்லாம் கட்சிக்காரர்கள் பட்டியலில் எப்படி பார்ப்பது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை - கட்சிக்கு அப்பாற்பட்டு மனிதர்கள், வயதானவர்கள் என்கிற கண்ணோட்டத்தில் ஏன் பார்க்கக்கூடாது. இப்போதைக்கு - மக்கள் நலப் பணியாளர்கள் என்கிற பணியே தேவையற்ற ஒன்று என்பதை ஒப்பு கொள்ள வேண்டி இருந்தாலும் - இப்போது காலியாக உள்ள இதர அரசு பணிகளில் அவர்களை மாற்றலாம். அந்த கோரிகையை -பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கையை பரிசீலிக்கலாம். இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை.

"மீசையில் மண் ஒட்டவில்லை" என்கிற அளவிற்காவது தப்பிவிடலாம். இடைக்காலத் தடையை தொடர்ந்து - நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வரும் போதெல்லாம் "FLASH NEWS" என்று தங்களின் ஆட்சியின், கட்சியின் மானத்தை கப்பலில் ஏற்றுவார்கள். தேவையா? மார்பில் அடித்து கொண்டு கதறும் வேலை இழந்தவரின் மனைவியை திரும்ப திரும்ப ஒளிபரப்புவார்கள். நீங்கள் எதிர்க்கட்சிக்கு பயப்படுகிறிர்களோ இல்லையோ ஊடகங்களுக்கு பயந்து தான் ஆக வேண்டும்.

ஆயிரம் வார்த்தைகள் தராத அதிருப்தியை - ஒரு காட்சி தந்துவிடும். உங்களுக்கு அம்மக்களின் அவல வாழ்க்கையை என்ன சொல்லி புரிய வைப்பது. ஒரளவுக்கு சம்பாதித்து கொண்டிருந்து விட்டு - திடீரென்று சம்பாதிக்க வழி இல்லாதவனாக மாறினால்... உங்களுக்கு அந்த தர்மசங்கடத்தை புரிய வைக்க முயற்சிக்கிறோம். "தாங்களும் திரைப்படத்துறையில் இருந்தீர்கள் - பிரபலமாக. ஒரு கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்பற்று இருந்த போது என்ன மாதிரியான மனநிலையில் இருந்து இருப்பீர்கள்". நிச்சயம், எதிர்கால பயம் கேள்விக்குறியாக உங்களையும் வளைத்து போட்டிருக்குமே.

எஞ்சியுள்ள வாழ்க்கையை எப்படி கழிக்கப் போகிறோம் என்கிற அலைக்கழிப்பு இருந்து இருக்குமே. அதை நல்லப்படியாக தாண்டி வந்து - அரசியல்கட்சியில் இணைந்து முன்றாவது முறையாகவும் முதல்வர் ஆகி விட்டீர்கள். ஆனால் எல்லோராலும் முடியாதே. சாமான்யன் வாழ்க்கையில் - ஒரே பாட்டில் அண்ணாமலை ரஜினி போல மாறுவதற்கு சாத்தியமே இல்லையே. வேலை போனால் வாழ்க்கையே போய் விடுமே.

லாட்டரி சீட்டை தடை செய்தீர்கள் - நல்லதற்கு தான். ஆனால் லாட்டரி சீட்டு விற்பனை செய்த யாருமே உங்களுக்கு வோட்டே போடுவதில்லை -காரணம் கோபம். ஏற்கனவே அரசு ஊழியர்களின் வாக்கு தி.மு.க வுக்கு தான் என்கிற பேச்சு எங்கும் இருப்பது தான். அதை மாற்ற முயல்வதற்கு பதிலாக - அந்த கருத்தை வலுப்படுத்துவதாக, காலத்துக்கும் மாற்றம் செய்ய விரும்பாததாக உள்ளது -உங்கள் செய்கை. எல்லா அதிருப்தியையும் - இலவசங்களை கொடுத்து சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறிர்களா?

அடுத்த ஆண்டிற்குள்ளாக எட்டு லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவாகி இருக்கும் செய்தி - அதை தான் உணர்த்துகிறது. இலவசங்கள் அதிருப்தியை அகற்றிவிடும் என்று நினைத்து கலைஞரும் ஏமாந்து போனார். கலைஞரை பார்த்தும் பாடம் கற்கவில்லையா? கலைஞரின் இலவச டி.வியை மறுத்த விவசாயியை மறந்து விடக்கூடாது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக" - மொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையாக அவை இருந்தது.

 யார் யாருக்கு எது தேவையோ அது கொடுத்தால் போதும். வேலை இழந்தவர்களுக்கு வேலை தான் வேண்டும் -இலவசங்கள் அல்ல. "இருக்கின்ற வேலையை பறிக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் அவர்களே வாங்கி கொள்வார்கள்".
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. வழக்கம்போல கடைசி வரிகள் நச்...

    ReplyDelete
  2. good article and as usual not biased and with true concern for both ends. Hope the "Madam Adament" try to consider this and have a common sense

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails