December 5, 2011

பெரியாரை மறந்தது - தினமணியா? திராவிடமணியா?

"சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்குமா?" என்று பகுத்தறிவுப்பூர்வமாய் ஒரு கேள்வி கேட்டுள்ளது பகுத்தறிவு விடுதலை. ஏன் அப்படி கேட்டிருக்கிறது என்பதை முதலில் வாசியுங்கள்.

"ஒவ்வொரு மாதமும் தலைவர்களின் பிறந்த தினம், நினைவு தினங்களின் பட்டியலை தினமணி வெளியிட்டு வருகிறது. டிசம்பர் மாதப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் 24 என்பதில் தந்தை பெரியார் நினைவு தினம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் எம்.ஜி.ஆர். மறைவை மட்டும் அந்த நாளில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அவர்களைப் போடக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. எம்.ஜி.ஆரையும் சேர்த்து அனைவருக்கும் தலைவரான பெரியார் நினைவை இருட்டடிப்பது - ஏன்?

இதற்குப் பெயர்தான் பார்ப்பனக் குசும்பு என்பது. சீப்பை ஒளித்தால் திருமணமா நிற்கும் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது." என்கிறது விடுதலை. மேற் கண்ட கட்டுரைக்கு டவுட் தங்கபாலு "மொட்டை தலையாக இருந்தால் சீப்பு தேவையில்லையே " என்று நக்கலடிக்கிறார். இனி நம் கருத்துக்கு வருவோம். இதில் பகுத்தறிவு குசும்பு ஒன்றுள்ளது. "எம்.ஜி.ஆரையும் சேர்த்து அனைவருக்கும் தலைவரான பெரியார் நினைவை இருட்டடிப்பது" என்கிற பகுத்தறிவின் கருத்துக்கு உள்ளார்த்தம் என்ன.

பெரியாரின் பெயரை வெளியிடாதது இரட்டடிப்பாம் அது போல எம்.ஜி.ஆரின் பெயரை வெளியிட்டது இரட்டடிப்பாம். என்னே பகுத்தறிவு குசும்பு. உங்களுக்கு எம்.ஜி.ஆர் தலைவராக தெரியவில்லை. அவர்களுக்கு பெரியார் தலைவராக தெரியவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். தினமணி நினைத்திருக்கும். "இவர்கள் என்ன நம் பண்டிகையை நினைவுக் கூர்ந்து வாழ்த்துக்களா சொல்கிறார்கள். பிறகு எதற்கு இவர்களின் பிறந்த, இறந்த நாட்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அல்லது "தினமணி நடத்த இவர்கள் என்ன மானியம், கீனியம் தருகிறார்களா. சொந்தக்காசை போட்டு தானே பத்திரிகை நடத்துகிறோம்" என்றும் நினைத்திருக்கலாம்.

நம் பதிவில் இணைத்துள்ள படங்களை பாருங்கள். கனிமொழியை வரவேற்க - பகுத்தறிவாளர் வீட்டு வாசலில் -ஆரத்தி என்ன. பூசணிக்காய் உடைப்பு என்ன. ஜாமினுக்கே இப்படி என்றால் நிரபராதியாக விடுதலையானால் பெரியாருக்கு கடா வெட்டி பொங்கலே கொண்டாடிவிடுவார்கள் போலும். இந்த லட்சணம் படைத்தவர்கள் தான் தினமணியை பேசுகிறார்கள். "பெரியாரை மறந்தது குறித்து". திராவிடமணிகளுக்கு பெரியார் கொள்கை மறந்து போனது. தினமணிக்கு பெரியாரே மறந்து போனது. அவ்வளவு தான் வித்தியாசம்.

மேலும் - மேலே சொன்ன தினமணியின் கூற்றில் வீம்பு இருப்பது போல தோன்றினாலும் - அந்த வீம்பில் நியாயமில்லாமலும் இல்லையே. "கடவுளை மற... மனிதனை நினை..." என்றவர்கள், "கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி..." என்றும் சொன்னவர்கள், "மதம் ஒழிய வேண்டும்" என்றெல்லாம் வசனம் பேசியவர்கள் - ஒரு மத பண்டிகையை மட்டும் காறி உமிழ்ந்து விட்டு - ஏனைய மத பண்டிகைகளுக்கு குழைந்து, குழைந்து வாழ்த்து தெரிவிக்கும் பச்சோந்திகளை பற்றி தினமணி கசப்புணர்வுடன் இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லையே.

"இதுதான் பகுத்தறிவின் யோக்கியதையா" என்று எள்ளி நகையாடி கூட அவர்களின் பகுத்தறிவு தலைமையை புறக்கணித்திருக்கக்கூடும். கேரள ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பார்களாம். ஆனால் இங்கே ஓட்டு வாங்கி ஜெயித்த பெருவாரியான மக்கள் கொண்டாடுகிற விழாவை மறந்துவிடுவார்களாம். திராவிடமணிகளுக்கு மட்டும் தான் ஞாபக மறதி இருக்குமா? தினமணிக்கு ஞாபக மறதி இருக்காதா? இது பார்ப்பனிய குசும்பு என்றால் - அது ​பகுத்தறிவு குசும்பு.

 "தம்மை வர்ணாஸிரம வாதிகள்" என்று சொல்லிவிட்டு - இன்று இவர்கள் ஒரு வித வர்ணாஸிரமத்தை தானே கட்டி கொண்டு அழுகிறார்கள். ஊழல் செய்தவனையும், குண்டு வைத்தவனையும் - சாதி, மதம் பார்த்து ஏசுவது, ஏசாமல் போவது என்கிற நிலைக்கூட ஒரு வித பார்ப்பனீயம் இல்லையா என்று தினமணி நினைத்திருக்கும்.​ "தினமணி செய்வது தவறு" என்றால் "திராவிடமணிகள் செய்வதும் தவறு". திராவிடமணிகள் செய்வது சரி என்றால், தினமணி செய்வதும் சரி. மல்லாக்க படுத்து கொண்டு எச்சிலை துப்பிக் கொண்டே "அய்யோ எச்சில் விழுதே" என்றால் எப்படி.

தினமணி இருட்டடிப்பு செய்ததை சொல்கிறார்கள். விடுதலை இருட்டடிப்பு செய்கிற செய்திகளை நாம் சொல்கிறோம். விடுதலை ஏட்டை தவிர ஒருவர் வேறு நாளிதழையே வாசிக்க மாட்டார் என்று வைத்து கொள்வோம். அப்படி ஒரு பகுத்தறிவு. விளைவு? கவிஞர் கனிமொழி ஜாமினில் விடுதலையான செய்தியை விடுதலையில் வாசித்தார். "எப்போ கனிமொழியை கைது பண்ணினாங்க" என்று அப்பாவியாய் கேட்டார். முறைத்தோம். கனிமொழி 194 நாட்கள் சிறையில் இருந்தது இவருக்கு தெரியாதாம். பிறகு தான் புரிந்தது. இவர் விடுதலையை தவிர வேறு இதழ்களோ, தொலைக்காட்சிகளோ பார்க்க மாட்டாரே. "கனிமொழி கைது" என்கிற செய்தியை விடுதலை கைதான நாளிலிருந்தே தனி செய்தியாக போடாததால் - நண்பர் குழம்பி விட்டார்.

இந்த பதிவை வாசிப்பவர்கள் கூட - விடுதலை இணையத்தில் கூட தேடி பார்க்கலாம். "கனிமொழி கைது செய்தி வந்ததா... இல்லையா" என்று. கலைஞரின் பேட்டியில் மட்டும், உள் பகுதியில் பட்டும்படாமல் கனிமொழி கைது வந்திருக்கும். பகுத்தறிவு தமது குசும்பாக "தங்களின் பங்காளிகளின் விடுதலை செய்தியை மட்டும் போடுவார்கள். கைது செய்தியை போட மாட்டார்கள். ஆனால் தமக்கு பிடிக்காதவர்களின் கைது செய்தியை மட்டும் போடுவார்கள். ஆனால் விடுதலை செய்தியை போட மாட்டார்கள். நல்ல ஊடக தர்மம். பார்ப்பனியமும் இதே குசும்பை தானே செய்யும்.

 விடுதலையின் மற்றொரு செய்தி இருட்டடிப்பை பார்ப்போம்.
"சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய முதலீடு இந்தியாவுக்குள் படையெடுக்கவிருக்கிறது - அதற்கு ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உட்பட கடும் எதிர்ப்புக் கொடியைத் தூக்கி இருக்கின்றன. நேற்று சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு பற்றி கலைஞர் குறிப்பிடும் பொழுது " பொருளாதாரம் சுனாமீக்குள் சிக்கிக்கொள்ளும் " என்று சொல்லி இருப்பதாக விடுதலை செய்தி பெருமையாக வெளியிடுகிறது.

 அதே நேரத்தில் வேறொரு வலைத்தளம், சில்லரை வணிகம் குறித்து வாக்கெடுப்பு வந்தால் -"தி.மு.க கூட்டணி கட்சி. அதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்" என்கிற தி மு க நிலை தகவலும் உள்ளது. ஆனால் விடுதலை இதை பிரசுரிக்காது. எந்த செய்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று பாமரனுக்கும் புரியும். ஆனால் விடுதலைக்கு புரியவே புரியாது. ஆக இப்படி தகவல்களை இரட்டடிப்பு செய்பவர்கள் தான் தினமணியை தூற்றுகிறார்கள்.

2 comments:

  1. தமிழ் நாட்டில் “விடுதலை சந்தாதாரர்” என்ற பெருமைக்குரிய சிலரில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன்.

    அரசாங்க நூலகத்தில் மட்டுமே பார்த்தது, இப்போதும் அங்கேயும் காணோம்.

    ReplyDelete
  2. நரேன்,

    என்னை ரெம்ப "புகழ்றிங்க"

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

இடுகைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களும், வெறுமனே பாரா(தி)ட்டும் பின்னூட்டங்களும் வெளியிடப்படா.

LinkWithin

Related Posts with Thumbnails