"இதனால் யாருக்கு லாபம்" என்று தினமணி எழுதி உள்ள தலையங்கம் - தினமணி அபிமானிகளை பெருமளவு வருத்தமடைய செய்துள்ளது. தமிழர்கள் மீதான அக்கறையில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் தலையங்கம் - வாசித்து முடிக்கையில் மலையாளிகள் மீதான பற்றுதலில் எழுதப்பட்டு விட்டதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தலையங்கத்தில் இருந்த ஒரு பகுதி இது."கேரள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுக்கு தமிழகத்தையே சார்ந்துள்ளனர். கறிக்கோழி, முட்டை ஆகியன மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,780 கோடிக்கு தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதே அளவுக்கு நெல்லும் பிற தானியங்களும் செல்கின்றன. கேரள மாநிலத்துக்கு எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று மறித்தால் அல்லது அத்தகைய சூழ்நிலையை உருவாக்கினால், அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது தமிழர்களும் தான்" என்கிறது.
இது தமிழர்கள் மீதான அக்கறை என்றாலும் - சாமானிய மக்கள் வேறு எப்படி தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாம். "தமிழர்கள் நஷ்டமடைவார்கள் " என்று சொல்லி சொல்லியே தமிழர்களது போராட்டத்தை முடக்க செய்வதற்கான சதியாக தான் தலையங்கம் காட்சி அளிக்கிறது. மேலும் தமிழர்களை அச்சமூட்டும் விதமாக இப்படி எழுதி உள்ளது. "கேரள மாநிலத்தவர் தமிழகத்தை நம்பாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து வாழ்ந்துவிட முடியும் என்றாலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பொருள்களை வரவழைப்பதில், செலவு அதிகம்.
இதனால் நெல், காய்கறி, கறிக்கோழி, முட்டை ஆகியவற்றுக்கு கேரள மக்கள் தற்போது கொடுக்கும் விலையைவிட 50 விழுக்காடு அதிகமாகக் கொடுக்கும் நிலைமை உருவாகும். இதைக் கேரள மக்கள் விரும்பவில்லை. விருப்பப்படவும் மாட்டார்கள்." என்கிறது. அதாவது தமிழர்களுக்கு நன்மை செய்வதாக சொல்லி கொண்டு - கர்நாடகத்திடம் போய் வாங்கி கொள் என்று எடுத்து கொடுக்கிறது.
ஈழத் தமிழர்கள் மற்றும் இதர தமிழர் பிரச்சனைகளில் - மற்ற ஆரிய, ஏன் திராவிட பத்திரிகைகளை விட தினமணி மிக உண்மையாக நெஞ்சுரத்துடனேயே செயல்பட்டது. அதனாலேயே தினமணி மீது நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை முகத்தில் தினமணி கரி பூசிவிடுமோ என்கிற அச்சமும் வருகிறது. அதே நேரம் சந்தடி சாக்கில் தினமணி மீது சேற்றை வீசவும் சிலர் முயல்கிறார்கள். அப்படி சேற்றை வீசுபவர்களின் யோக்கியதை நமக்கு தெரியும் என்பதால் தினமணியை சந்தேகிக்க வேண்டியதில்லை.
தொடர்ந்து தினமணி தலையங்கம் இப்படி தொடர்கிறது. "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை நீரால் பயன்பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைக் காட்டிலும் மிக அக்கறையாகவும் - அரிசி, முட்டை, மாமிசம் பெற தமிழகத்தை நம்பியிருக்கும் கேரள மக்களைக் காட்டிலும் அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது."தினமணியா இப்படி எழுதி இருப்பது என்று ஆச்சர்யமாக உள்ளது. இந்த மிக பெரிய ஜனத்திரளுக்கு வேறென்ன காரணம் அல்லது சக்தி இருக்கக்கூடும். தாங்கள் வாழ்வதாரமே எதிர்காலத்தில் சூனியமாகி விடுமோ என்கிற விவசாயிகளின் அச்சம் - அவர்களை போராட தூண்டி உள்ளது என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும். விவசாயம் மட்டுமல்ல குடிநீர் தேவைகள் கூட - தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பெரிதளவில் பாதிக்கப்படக்கூடும் என்கிற அச்சமுள்ளது.
அதனால் - எல்லோரும் தங்களின் வீட்டு பிரச்சனையை பார்ப்பது போல பார்க்கிறார்கள். நிச்சயம் இந்த"ஒற்றுமையை" வேறு சில சக்திகள் எதிர்பார்த்திருக்காது தான். இது மக்களின் போராட்டம். மக்கள் சக்தியே ஆட்டுவிக்கிறது. தினமணி நினைப்பது போல வேறு சக்தி கிடையாது. மேலும் இப்படி தொடர்கிறது - தம் தலையங்கத்தை.
"இந்தப் பிரச்னை போதாதென்று, நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும் கேரளத்து மாணவர்களைத் தமிழர்கள் தாக்கியதாக, ஒரு மலையாளப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி, கேரளத்தில் உள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், அந்தச் செய்தி பச்சைப் பொய் என்பதே உண்மை. இதே மலையாளப் பத்திரிகைதான், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற செய்தியை மிகைப்படுத்தி, கேரளத்தில் இந்த அணைக்கு எதிரான பிரசாரத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்கிறது.
ஆக மலையாளிகளின் ஊடகங்களின் லட்சணங்களை தெரிந்து வைத்திருந்தும் - தமிழர்களின் குரலாக தினமணி ஒலிக்காமல் நடுநிலை என்கிற பெயரில் தமிழர்களை தட்டி வைக்க நினைப்பதேன். கேரள எல்லையில் தமிழ் பெண் தொழிலாளர்கள் மீதான கொடுமை குறித்து செய்தி போடாத தினமணி - கேரள மாணவன் அடிக்கப்பட்டதான வதந்தியை தம் தலையங்கத்தில் திணிக்க முயல்வதேன்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
ReplyDelete"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"