February 21, 2012

"ஸ்கூலுக்கு போக பயமா இருக்கு."




"ஸ்கூலுக்கே போக பயமா இருக்குப்பா." என்று மாணவர்கள் பள்ளியை பார்த்து மிரண்ட காலம் போய் - இன்றைக்கு ஆசிரியர்கள் மிரள்கிற காலம் வந்துள்ளது - மாணவர்களின் இம்சைகள் தாங்காது... மாணவன் ஒருவனால் சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆசிரியை கொலை செயல் - ஆசிரியைகளுக்கு மிரட்டல் விடுக்கும் செயல்களாக மாறி மாணவர்களால் ​தொடர்ந்து விருதுநகர், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பள்ளிகள் வரை என்று நீள்கிறது. மாணவர்களை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் விழிக்கிறார்கள் ஆசிரியர்கள். இந்நிலை தொடர்ந்தால் - எதிர்காலத்தில் ஆசிரியர் பணியை விரும்புபவர்கள் இருப்பார்களா என்கிற பெருத்த சந்தேகம் எழுகிறது.​

சென்னை ஆசிரியை உமாமகேஸ்வரி படுகொலையை தொடர்ந்து - கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இறைவணக்கம் பாட செல்லாத இரண்டு மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால், "சென்னையை போல சம்பவம் நடக்கும்' என்று ஆசிரியரை மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். அடுத்து இந்த வார மிரட்டலாக - குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பள்ளி மாணவர்களின் மிரட்டல் செயல்.

மார்த்தாண்டம் அருகே நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியை ஹோம் ஒர்க் கொடுத்ததாகவும், அதை செய்யாததால் அவர் மாணவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று மாணவர்கள் திட்டமிட்டு புத்தகபையில் ஒரு கத்தியை வைத்து பள்ளிக்கு கொண்டு வந்ததாகவும், ஆசிரியையிடம் கத்தியை காட்டி, "சென்னை பள்ளியில் நடந்தது தெரியுமா? அதுபோல் உனது படமும் பத்திரிகை, தொலைகாட்சியில் வரவேண்டுமா?' என மிரட்டியதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த ஆசிரியை இதுகுறித்து ஆசிரியர் கூட்டணிக்கும், சங்கத்திற்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனநிலை இப்படி மோசமாக சிதைந்து கொண்டிருப்பது ஏன். திரும்ப திரும்ப - இது பற்றி விவாதிக்க வேண்டி தான் உள்ளது. மாணவர்கள் தறிகெட்டு போக என்ன காரணம். சென்னை போன்ற பெரு நகரங்களில் - தாய், தந்தை வேலைக்கு போவதால் பிள்ளைகளை பார்த்து கொள்ளவோ, நல்லது கெட்டது சொல்ல யாரும் இல்லாததாலோ, செல்லம் கொடுத்து வளர்ப்பதாலோ - அனர்த்தமான நிகழ்வுகள் நடக்கிறது என்று சென்னை ஆசிரியை படுகொலைக்கு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக - கூட்டு குடும்பங்கள் அமையப் பெற்ற கிராமப்புற மாணவர்களும் - அதே மாதிரியான ரவுடித்தனமான செயல்களை செய்யும் போது - முழுமையாக இது குறித்து ஆராய்வது அவசியப்படுகிறது.

"மாணவர்கள் விருப்பப்படி நடக்க" சொல்கிறார்கள் புத்திஜிவிகள். மாணவர்களை படிக்கவோ, எழுதவோ சொல்லாமல் இருப்பதே அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இளைய தளவழி போன்ற தறுதலைகள், சினிமா நட்சத்திரங்கள் - அகராதியாக பஞ்ச் வசனம் பேசி நடிப்பதை, பெரியவர்களை கிண்டலடிப்பதை பார்க்கிற மாணவ செல்வங்கள், அம்மாதிரி பேசுவதை இயல்பாக்கி கொள்ள முனைகிறார்கள். ஏற்கனவே பலரும் விவாதிப்பது போல சின்ன திரை காட்டும் வக்கிரங்கள். பள்ளி மாணவர்கள் காதலிப்பதாக அமைய பெற்ற விஜய் தொலைக்காட்சி நாடகங்கள். மனிதர்களை சின்னா பின்னப்படுத்தும் சின்னத் திரை பெட்டியை நடுவீட்டில் வைத்து கொண்டு "குத்துதே, குடையுதே" என்றால் என்ன செய்வது.

 யாரோ செய்யும் தவறுகளையும் உள் வாங்கும் குழந்தைகள் - பெற்றோர்கள் செய்யும் தவறுகளை மட்டும் உள்வாங்காதா? குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தகப்பனை பார்க்கிற குழந்தை - "குடிப்பது தவறு" என்று எப்படி எடுத்து கொள்ளும். "தப்பென்றால் அப்பா குடிப்பாரா" என்று கேட்காதா? நண்பர் ஒருவர் - தம் சகோதரி நிறைய கஷ்டப்படுவதால் - அவரின் மகனை தம் வீட்டில் படிக்க வைக்கிறார். பத்தாவது முடித்து விட்டு - பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படிக்கிறான். ஒரு நாள் குடித்து விட்டு வந்திருக்கிறான். தாய் மாமன், "குடிச்சிட்டா வந்திருக்கே" என்று அடித்திருக்கிறார். பையன் "நீ மட்டும் குடிக்கிறே" என்று கேட்டிருக்கிறான். தம் குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் என்று நினைக்கிற பெற்றோர் - முதலில் தாங்கள் எந்த குற்றம் குறையும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

எனது வகுப்பு தோழனே - ஒன்பதாவது படிக்கும்போதே, அவன் அப்பா வாங்கி வைத்திருக்கும் சரக்கில் - கொஞ்சம் குடித்து விட்டு தண்ணீரை ஊற்றி வைப்பான். ஒரு மாணவனுக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தால் மட்டும் போதாது. நல்ல பெற்றோர்களும் அமைய வேண்டும். எல்லாம் சரியாக இருந்தாலும் - நிலை தடுமாறும் சிறுவர்கள், குற்ற செய்களில் ஈடுபடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ​குற்றம் செய்தவர்கள் - மாணவர்களாக இருந்தாலும் கூட கடுமையான தண்டனை தந்து தான் ஆக வேண்டும். மாணவர்கள் என்பதற்காக காட்டப்படும் தயவு தாட்சண்யம் - மேலும் பல இளம் குற்றவாளிகளை தான் உருவாக்கும்.

எப்படி மாணவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் மீது கொடூர தாக்குதல் புரிந்தோருக்கு - தயவு தாட்சண்யம் பார்க்க கூடாதோ, அதே போல மாணவர்கள் செய்யும் குற்றச்செயல்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். சட்ட திட்டங்கள் - மாணவர்களின் நன்மைக்காக தானே ஒழிய வேறு எதற்கு. படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் - அந்த மன அழுத்தத்தில் இளம் குற்றவாளிகள் உருவாகிறார்கள் என்று சொல்வதில் முழு உண்மை இல்லை. சிறுவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்.

சில மாதங்களுக்கு முன்னால் - பனிரெண்டு வயது பள்ளி மாணவனை- அவனது பள்ளியின் மூத்த மாணவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி - அது வெளியே தெரியாமல் இருக்க அவனை கொன்றுவிட்டனர். சில வருஷங்களுக்கு முன்னால் இதே போன்ற மற்றொரு சம்பவம். தெருவில் விளையாடும் சக நண்பர்களாலேயே - மேற் சொன்ன காரணத்தால் கொல்லப்பட்ட சிறுவன். இவைகள் பள்ளி மாணவர்களின் கொடூரம் என்றால் கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் இப்படி. சக தோழியை கெடுத்து குட்டி சுவராக்கிய மாணவர்கள், பஸ் டே கொண்டாடத்தில் அப்பாவி பொதுஜனங்களின் மண்டையை மற்றும் பஸ்ஸின் கண்ணாடியை உடைக்கும் மாணவர்கள்.

எந்த படத்து நாய்கனை முன்னுதாரணமாக கொண்டு உடைத்தானோ? ஹரோயிசம் என்பது இதுவல்ல. நன்றாக படித்து, ஒழுக்கமானவனாக இருப்பதே ஹீரோயிஸம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3 comments:

  1. விளக்கமான பதிவு ! நன்றி சார் !

    ReplyDelete
  2. சரியான பதிவு, மாணவர்களின் ஒழுக்கத்திற்கு முன்மாதிரிகள் இல்லாததே இவ்வகையான செய்திகள். ஒழுக்கம் வேண்டுமானால் அதற்கேத்த கடுமையான தண்டனைகளும் தேவை.

    இந்திய மாணவர்களின் பலமே மனனம் செய்து நினைவில் நிறுத்துவதுதான். aptitude reasoning and logical skills போன்றவற்றை நமது கல்வியமைப்பு வளர்க்காதபோது, அதை மாணவர்களே செய்யவேண்டிய நிலை உள்ளது, நினைவு பலத்தால் அதனை செய்ய முடியும்.

    ஆனால் அந்த பலத்திற்கு- தேர்வுகள் தேவையில்லை, அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்வு மற்றும் நுழைவு தேர்வு தேவையில்ல, மாணவர்களை அடிக்ககூடாது திட்டக்கூடாது என்றவைகளால்- ஆபத்து. இன்னும் கொஞ்சம் காலம் சென்றால் பொதுத்தேர்வே வேண்டாம் என்ற நிலை வரும். மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கம் வரும்??

    ReplyDelete
  3. நரேன்,

    சரியான கருத்துரை. மாணவர்களுக்கு பயந்து, பயந்து ஒவ்வொன்றாய் விட்டு விடுவார்களோ என்னவோ. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

இடுகைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களும், வெறுமனே பாரா(தி)ட்டும் பின்னூட்டங்களும் வெளியிடப்படா.

LinkWithin

Related Posts with Thumbnails