.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

February 29, 2012

வாங்க - பந்த் நடத்தலாம்.

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வருஷா வருஷம் கம்யூனிஸ்ட்கள் நடத்தி காட்டிவிடுகிறார்கள். காங்கிரஸுடன் மத்தியில் கூட்டணி வைத்திருந்த போதும் - அதே காங்கிரஸை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் செய்ய தவறியதில்லை. இந்த வருஷ பொதுவேலை நிறுத்தம் - நேற்று செவ்வனே நிறைவேறியது. தமிழகத்தில் மட்டுமல்ல - எங்கும் பொது வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி சற்றே உயிர்ப்புடன் இருக்கும் பகுதியில் மட்டும் கடை அடைப்பு சிறிதளவு சாத்தியப்பட்டுள்ளது.

சமீபகாலமாய் -​மக்கள் ஆதரவு ஏன் கம்யூனிஸ்ட்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு இல்லாமல் போனது. விலைவாசி உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம் என்றால் - மக்கள் அடித்து பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டாமா? ஏன் ஆதரவு தெரிவிப்பதில்லை. "வேலை நிறுத்தம் பண்றது தானே அவங்க வேலை. எங்களுக்கு வேற வேலை வெட்டி இருக்குல" என்கிறார்கள் பொதுமக்கள். மக்கள் ஆதரவில்லாமல் செய்யும் போராட்டத்தால் என்ன புரியோஜனம். "பந்த்ங்குறது அவங்களுக்கு காபி,டீ சாப்பிடுற மாதிரி" என்கிறார் ஒரு மாற்று கட்சிக்காரர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

நேற்று முன் தினம் நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டாண்ட்டில் நின்று பேசி கொண்டிருந்தேன். கம்யூனிஸ்ட்கள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தனர். "தோழரே... நாளைக்கு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம். பல்வேறு ஆட்டோ தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. தோழரே நீங்களும்..." என்று கம்யூனிஸ்ட்கள் முடிக்கக் கூட இல்லை. நண்பர், "ஓடி போயிடுங்க. பந்தாம்ல பந்து. கொலை வெறில இருக்கேன்." என்றார். கம்யூனிஸ்ட்கள் "ரெம்ப விபரமானவனா இருக்கான். நம்ம பருப்பு இங்க வேகாது" என்று அடுத்த ஸ்டாண்ட்டை நோக்கி சென்றனர்.

பொதுமக்கள் மற்றும் சாமானியர்கள் மட்டும் - இந்த கம்யூனிஸ்ட்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிரியாக இல்லை. கம்யூனிஸ்ட்களுக்கே அதில் ஈடுபாடில்லை. எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றால் என்ன அர்த்தம். அவர்களின் ஆர்ப்பாட்ட கதைக்கு ஒரு சின்ன உதாரணம். மே.வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்ற இருபதாம் நாளே, "மம்தா பானர்ஜி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து" தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கலைஞரே "நூறு நாட்கள் அவகாசம் தருகிறார். ஒரு ஆட்சியை பற்றி விமர்சிக்க" ஆனால் கம்யூனிஸ்ட்களுக்கு அவ்வளவு நாள் கூட பொறுக்க முடியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்களே - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தராததில் ஆச்சர்யமென்ன. இணையத்தில் வாசித்த ஒரு கம்யூனிஸ்ட்டின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள், “நாளைக்கு நான் வேலைக்கு வருவேன்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார் எங்கள் சங்கத்தின் உறுப்பினர். இதுவரை நடந்த எல்லா வேலை நிறுத்தங்களிலும் பங்கு பெற்றவர் அவர். சங்கத்தின் நடவடிக்கைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர் தான். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.

“நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி..” என்று ஆரம்பித்து நான் அவரிடம் பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தம் ஏன் என்று விளக்க ஆரம்பித்தேன். நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வூதியச் சலுகையான பென்ஷன் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10000/- கொடுக்கப்பட வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முழுக்க முழுக்க ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து தனியார் நிறுவனங்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொன்னேன்" என்று எழுதி உள்ளார்.

கட்டுரையாளருக்கு தெரியாதா? கம்யூனிஸ்ட்கள் கையில் இந்தியா போனாலும் - இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லையென்று. அவர்களுக்கு தெரியும். ஆனாலும் வேலை நிறுத்தம் நடத்தியாக வேண்டுமே. மத்திய அரசில் அங்கம் வகித்த போது - யோசனை சொல்லி இருக்கலாமே. எதுவும் செய்ய மாட்டோம். பந்த் மட்டும் செய்வோம் என்றால் எப்படி. மேலும் கட்டுரையாளர் இப்படி தொடர்கிறார். "நாடு முழுவதும் அனைத்து பெரிய சங்கங்களும் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை நிறுத்ததில் தாங்கள் பங்கு கொள்ளாமல் இருப்பது எப்படிச் சரியாய் இருக்கும் என கேட்டேன்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு “சரி. இந்த வேலை நிறுத்தம் செய்வதால் எல்லாம் சரியாகிவிடுமா? அட போங்க தோழர்” என மிகச் சாதரணமாகச் சொன்னார்.“ஒருநாளில் எப்படி சரியாகி விடும். சரியாகாது தான். அதற்காக பாதிக்கப்படுகிற நாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தால்...?” என்றேன் என்கிறார் கட்டுரையாளர். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து - இவர்கள் பொது வேலை நிறுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக தமிழகத்தின் ஒரு பகுதியே கொந்தளித்தப்போது - ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்ப்பாக கம்யூனிஸ்ட்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கலாம். கேரள கம்யூனிஸ்ட்கள் கோபித்து கொள்வார்களே - அப்படி ஏதேனும் செய்தால் என்று அறிக்கை மட்டும் விட்டார்கள்.

விலைவாசியை எதிர்த்து எப்போதும் வேலை நிறுத்தம் செய்யலாம். விலைவாசி நிச்சயம் கோபித்து கொள்ளாது. மாதம் ஒரு தடவை எரிபொருள் விலை உயர்த்தப்படுகிறது. மறு நாள் ஒரு ஆர்ப்பாட்டம். அவ்வளவு தான். மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை - கம்யூனிஸ்ட்களுக்கு அறிவித்து விட்டு தான் நாட்டிற்க்கே அறிவிப்பார்கள் போலும். "ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகுங்க" என்று. ஆக போராட்டமும், வேலைநிறுத்தமும் கம்யூனிஸம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகள். அவர்கள் அப்படி தான் இருப்பார்கள் என்பதை உணர்ந்த கம்யூனிஸ்ட் இப்படி சொல்கிறார் - அந்த கட்டுரையில். "

”இல்ல தோழர். இதெல்லாம் வேஸ்ட். இப்படி வருசத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஸ்டிரைக் செய்வோம். அவ்வளவுதான். கவர்ன்மெண்ட்டு அது பாட்டுக்கு செய்றத செஞ்சுக்கிட்டே இருக்கும்” என்றார். கடைசியில் மூளைச்சலவை செய்து தம் நண்பரை - அந்த கம்யூனிஸ்ட் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள செய்திருப்பார். நண்பரும் வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டிருப்பார். "லீவ்... லீவ்..." என்று அலைபவர்களுக்கு தான் வேலை நிறுத்தம் என்றால் பிடித்தமானதாக இருக்கும்.

வேலை நிறுத்தம் என்பது தேவையான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. அதை கடைசி ஆயுதமாக தான் பயன்படுத்த வேண்டும். வேலை நிறுத்தம் என்ற வார்த்தையை கேட்டாலே அரசாங்கம் அஞ்ச வேண்டும். ஆனால் அப்படி அஞ்சியதாக தெரியவில்லை. எனக்கு தெரிந்து 80களில் ஈழத்தமிழர் நலனுக்காக - மத்திய அரசுக்கு அதை தெரிவிக்கும் முகமாக வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. மக்கள் அந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்தார்கள். அது தேவையான வேலை நிறுத்தம். இப்போது முல்லை பெரியாறு விவகாரத்திற்கு வர்த்தக அமைப்புகள் உட்பட பலர் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். மக்கள் முழுமனதுடன் ஏற்றனர். ஒவ்வொரு தமிழனும் - எதிர்ப்பை காட்ட அதை தவிர வேறு வழி இல்லை.


ஆனால் கம்யூனிஸ்ட்களின் எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம் என்பது... வேலை நிறுத்தத்திற்கே மரியாதை இல்லாமல் செய்துவிடுகிறது. எங்கள் முதலாளி ஒரு நாள் - ஓயாமல் விடுமுறை எடுப்பவனை பார்த்து சொன்னார். "லீவ் வேணுமா? இவ்வளவு நாள் வேலைக்கு வந்து சும்மா இருப்ப. இப்ப லீவ் போட்டு சும்மா இருக்க போறே. போ... போ..." என்றார்.
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. அம்மாவை எதிர்த்து பந்த் நடத்த தைரியமில்லை. அப்பாவி அய்யா மன்னு மோகன்சிங்கை எதிர்த்து பந்த் நடத்த தைரியம் தேவை இல்லை.

  ReplyDelete
 2. வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்ன்னு சொல்லி சொல்லி - தமிழ்நாட்டில் இருந்த நிறைய மில்களுக்கு சங்கு ஊதினான்ங்க. இருந்தும் இவங்க கொலை வெறி அடங்கலயா?

  ReplyDelete
 3. பந்த் நடைப்பெற்றதா????? அப்படியா??

  யார் வேலைநிறுத்ததில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால் //ஓயாமல் விடுமுறை எடுப்பவனை பார்த்து சொன்னார். "லீவ் வேணுமா? இவ்வளவு நாள் வேலைக்கு வந்து சும்மா இருப்ப. இப்ப லீவ் போட்டு சும்மா இருக்க போறே. போ... போ..." என்றார்.//
  அதாங்க அரசாங்க மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.

  ReplyDelete
 4. வேணா. நா அழுதுடுவேன்.

  ReplyDelete
 5. சும்ம இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று வடிவேலை கேட்டால் தன் தெரிய்ம்

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails