February 2, 2012

அ.தி.மு.க. v/s தே.மு.தி.க.

"குடிகாரனின் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு" என்பது போல "கூட்டணியில் இருக்கும்போது பேசுகிற பேச்சு - கூட்டணியை விட்டு விலகினால் போயே போச்சு" தான். வேண்டா வெறுப்பாக வைத்து கொண்ட கூட்டணி, தேர்தலின் போதே எதிரொலிக்கவில்லையா. தே.மு.தி.க தேர்தல் முடிந்து எட்டரை மாதங்களுக்கு பிறகு, சில சட்டசபை கூட்ட தொடர்களுக்கு பிறகு விலைவாசி உயர்வு குறித்து முதல் முறையாக பேசி உள்ளது.

 தே.மு.தி.க எம்.எல்.ஏ சந்திரகுமார், "உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை இந்த அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்" என்று பேசினார். ஒரு பொறுப்புள்ள கட்சியாக தே.மு.தி.க இருப்பின், "விலை ஏற்றத்தால் மக்கள் படும் அவதிகளை பட்டியல் இட்டு" பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் வரை காத்திருந்து ஏன் விலை ஏற்றுனீர்கள் என்று கேட்பது - மக்கள் மீதான அக்கறையில் கேட்டதாக தெரியவில்லை.

தி.மு.க பாணியில் வெளிநடப்பு அல்லது குண்டு கட்டாக தூக்கி வெளியே அனுப்ப காத்திருப்பதற்கான செய்கையாக தான் தோன்றுகிறது. தேர்தல் வரை காத்திருந்து பிறகு விலை ஏற்றுவது - எந்த ஆட்சியிலும் நடப்பது தான். தேர்தல் முடிந்த அன்றைய இரவே காங்கிரஸ் அரசு எத்தனையோ முறை பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. எப்போதும் இது விமர்சிக்கப்படக் கூடிய விஷயமே. தவிர்க்க முடியாத சில விலையேற்றத்தையும் அரசியல்வியாதிகள் (ஜெ உட்பட) - தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நிலை தொடரும் வரை - இந்த நிகழ்வு இருக்கவே செய்யும்.

ஜெ எதிர்க்கட்சி வரிசையில் இருந்து இருந்தால் நிச்சயம் விலையேற்றத்தை கண்டித்து இருப்பார். எதிர்க்கட்சி வரிசையில் அமரும்போது - மக்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு புரியும். இதற்கு முதல்வர் நியாயமான பதிலை சொல்லி இருக்கலாம் அல்லது பதிலை தவிர்த்திருக்கலாம். கலைஞராக இருந்தால் ரங்கநாதன் தெருவுக்கு போய் பார்க்க சொல்லி பேச்சை முடித்திருப்பார். ஆனால் முதலமைச்சரால் முடியாதே. பொங்கி எழுந்து, முதல்வர் ஜெயலலிதா இப்படி பேசினார்.

"இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் எழுந்து, "இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி தான் ஜெயிக்கும். அது இயல்புதானே" என்று கூறினார். அதற்கு முதல்வர், "இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார்" என்றார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த் "ஏன் நீங்கள் கூடத்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் தோற்றீர்களே" என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது.

இப்போது இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதா பிரச்சனை. ஆக சட்டசபையை சத்தசபை ஆக்கி உள்ளார்கள். இருவரும் சினிமா கலைஞர்கள் என்பதால், கிளைமாக்ஸ் காட்சியில் சவால் விடும் காட்சியில் நடிப்பதாக நினைத்துவிட்டார்கள் போலும். பொதுக்கூட்டத்தில் இரண்டாந்தர பேச்சாளர்கள் கைத்தட்டலுக்கு பேசுவது போல பேசும் இடமா சட்டசபை. இந்நிலையில், சபையை அமைதி நிலைக்கு கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தே.மு.தி.க., உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆக, தே.மு.தி.க என்ன நடக்க வேண்டும் என்று நினைத்து உள்ளே சென்றதோ, அது நடந்தே விட்டது. "ஜனநாயக படுகொலை" என்று அறிக்கை விட வசதியாக இருக்குமே.

இதனிடையே சட்டமன்றத்தில் தே.மு.தி.க உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட சபாநாயகர், தே.மு.தி.க., உறுப்பினர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழு விசாரிக்க பரிந்துரை செய்வதாக கூறினார். அப்போது முதல்வர், "சபையில் தே.மு.தி.க., எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார்" என்று தெரிவித்தார். என்னே பெருந்தன்மை.

சபை நாகரீகம் என்பது எவருக்கேனும் தெரிய வேண்டும். ஜெவோ, கலைஞரோ எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் - சட்டசபைக்கே வருவதில்லை. யார் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் வெளிநடப்பு அல்லது வெளியேற்றம் போன்றவையே நடக்கிறது. எந்த மாநில அரசியல்வாதிகளிடத்திலும் இல்லாத ஒரு அழுக்கு - தமிழக அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்கும் போக்கு, சினேகமின்மை போன்றவை. "ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாவதும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாவது ஜனநாயகத்தில் இயல்பான ஒன்று" என்கிற சாதாரண உண்மையை கூட எப்படி மறந்து போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

 தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு முதல்வர் இப்படி பேசினார்.
"தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததால் தான் வெற்றி பெற்றோம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தே.மு.தி.க.வுடன் கூட்டணி இல்லாவிட்டாலும் இதே வெற்றி யைத் தான் பெற்று இருப்போம். அவர்கள் எங்களுடன் சேர்ந்ததால்தான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏறுமுகம் வந்தது. இனி அவர்களுக்கு இறங்கு முகம் தான். தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை. எங்கள் கட்சிக்காரர்கள் கூறிய விருப்பத்திற்காகத்தான் கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க சேர்ந்ததால் தான் அவர்களுக்கு 41 இடங்கள் கொடுக்கப்பட்டு வெற்றி பெற்றார்கள். இல்லையென்றால் ஒரு இடம் கூட கிடைத்திருக்காது.

மிகவும் அருவருக்கத்தக்க வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அவர்களுடைய உறுப்பினர்களும் இங்கே நடந்து கொண்டார்கள். இவர்களுடன் கூட்டணி சேர்ந்ததில் உள்ளபடியே வெட்கப்படுகிறேன்! தகுதி இல்லாதவர்களுக்குப் பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இப்போது நடந்து கொண்டது தான் உதாரணம்" என்று முதலமைச்சர் தெரிவித்தார். பல நாள் கோபத்தை கொட்டி தீர்த்துவிட்டார் போலும். ஆனால் அதற்கு சட்டசபை உகந்த இடம் அல்லவே. கட்சி அலுவலகத்தில் பேச வேண்டிய பேச்சு.என்ன செய்வது. 89ல் கலைஞர், ஜெ எதிர்க்கட்சி தலைவராக சட்டசபைக்குள் நுழைந்தபோது - என்ன நினைத்தாரோ, அதை தான் ஜெ இன்று விஜய்காந்தை பார்த்து நினைக்கிறார். அரசியலில் வெற்றி என்பது தகுதியின் அடிப்படையில் வருவதில்லை. நரித்தனத்தின் வாயிலாக பெறப்படுகிறது.

அரசியலில் தகுதியே வெற்றி பெற வேண்டும் என்றால் - எம்.ஜி.ஆருக்கு பிறகு, தலைமை போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்ததா? வை.கோவை நம்ப வைத்து கழுத்தை அறுத்ததற்கு வெட்கப்படாதபோது, விஜய்காந்த் குறித்து பேச என்ன உள்ளது. ஜெயலலிதாவுக்கு தான் எனகிற ஒரு பிறவிக்குணம். கேப்டனுக்கு நாக்கை துருத்துவது, கை நீட்டுவது போன்றவை எல்லாம் பிறவிக்குணம். சசியை சேர்த்து கொண்டது, விஜய்காந்துடன் கூட்டணி வைத்தது தவறு என்பது போன்ற தவறுகள் இன்னும் எத்தனை உள்ளதோ முதல்வரிடம்.  



வை.கோவை போல  விஜய்காந்தை யும் கூட்டணியிலிருந்து விரட்டி இருந்தால் - இன்றைக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்குமா? என்ன செய்வது. வை.கோவுக்கு பயந்து விஜய்காந்தை வளர்த்தாயிற்று. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ஏனைய கட்சிகளும் சபையில் இருந்திருக்ககூடும். "நாளை நமக்கும் இதே மாதிரியான வசவு கிடைக்கும்" என்று நினைத்திருக்கலாம். "எதிரிகளை எல்லாம் நண்பராக்கி கொள்பவர்களும் இருக்கிறார்கள்". அது போல "நண்பர்களை கூட எதிரிகளாக்கி கொள்பவர்களும் இருக்கவே செய்​கிறார்கள்".

4 comments:

naren said...

சரியாக அலசிய பதிவு.
விலை ஏற்றத்தால் மக்கள் பாதிப்பு என்று கருத்து இந்த ”கூத்தினால்” பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

திறமையான அரசியல்வாதி என்பவர், தவிர்க்கமுடியாத காரணத்தினால் விலையேற்றம் என்பதைவிட, தவிர்க்க முடியாத காரணத்தை தவிர்த்து விலையை ஏற்றாமல் திறமையாக கையாள்வதுதான். இல்லையென்றால் அவர்கள் “அரசியல்வியாதிகள்” தான்.

அம்மாவுக்கு என்ன ராசியோ தெரியவில்லை, அவரிடம் கூட்டணி வைத்து அவமானம் பட வேண்டும் என அனைவருக்கும் விருப்பம்.

ரமேஷ் வெங்கடபதி said...

மன்னை குடும்பத்தாரிடம் கொண்ட கூட்டணிக்கு வருத்தப்படும் நாளையும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!

பாலா said...

இந்த விஷயத்தில் திமுகதான் கலக்கமடைந்திருக்கும். எங்கே இவர்கள் இரண்டு பெரும் போடும் சண்டையில், நாம் இருப்பதையே மக்கள் மறந்து விடுவார்களோ என்று நினைத்திருப்பார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இது எல்லாம் அசிங்கம், அவமானம் சார்! இப்ப தான் சூடு பிடித்திருக்கு... இனி என்னென்ன நடக்குமோ !

LinkWithin

Related Posts with Thumbnails