பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வுக்கு பின் மின் கட்டணத்தையும் அம்மா உயர்த்திவிட்டதாக விசனப்படுகிறார்கள். கம்யூனிஸ்ட்கள் போராட்டத்திற்கு தயாராகிவிட்டார்கள். மேலும் "இது நியாயமா? அநியாயமா?" என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். சரி. மின் கட்டண உயர்வு நியாயமா? அநியாயமா? மின் வாரியத்தில் பணிபுரியும் பட்டி மன்ற நடுவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்."பேருந்து கட்டணம் பத்தாண்டுகளுக்கு பிறகு தான் உயர்த்தப்பட்டது. இந்த மின்கட்டணம் கூட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகே உயர்த்தப்பட்டுள்ளது. மிக பெரிய நஷ்டத்தில் மின்வாரியம் உள்ளது. இந்த மின் கட்டண உயர்வை அநியாயம் என்று சொல்லும் எவரும் பத்து வருஷத்திற்கு முன் பெற்ற சம்பளத்தை தற்போது பெற்று கொண்டிருக்கவில்லை எனும் போது - இந்த மின் கட்டண உயர்வு எப்படி அநியாயமாகும். அவரவர்களுக்கு சராசரியாக உயர வேண்டிய ஊதிய தொகை உயரத் தானே செய்திருக்கும்.
மின் கட்டணமும் - அந்த ஊதிய விகிதாச்சாரப்படி உயர்வது தானே முறை. இலவசமாகவா மின் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள். அதனால் இந்த கட்டண உயர்வு நியாயமே" என்கிறார் பட்டிமன்ற நடுவர் மற்றும் மின்சார ஊழியர். பேச்சை கேட்டு கொண்டிருந்த நண்பர் திருப்தி அடையாதவராக "அதெப்படி நியாயமாகும்" என்று எம்மை திருப்பி கேட்டார். அவருக்கெப்படி புரிய வைப்பது.
புரியோஜனமானவற்றை இலவசமாக பெறவும், புரியோஜனமற்ற டாஸ்மாக் சரக்கை காசு கொடுத்து வாங்கியும் பழக்கப்பட்டவர் இல்லையா? "உங்க பையனுக்கென்ன வயசு." என்று கேட்டோம். "ஒன்பது" என்றார். "ஆக, சென்ற முறை மின் கட்டணம் உயர்ந்த போது பிறந்திருக்கான் இல்லையா" என்றோம். ஆமா என்றார். "பையன் ஒன்பது வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரியா இப்ப இருக்கான். அப்ப சாப்பிட்டதையா இப்ப சாப்பிட்டிட்டு இருக்கான். பையன் வளர்கிறானே. அவனுக்கு சாப்பாடு போட்டு கட்டுப்படியாகாதே, அதனால் அவன் வளரக்கூடாதுன்னு நினைச்சிருப்பிங்களா.""எப்படி நினைக்க முடியும். சவலைப்பிள்ளையாக இருக்கணும்னு யாராவது நினைப்பாங்களா?" "வளர்ச்சி, ஏற்றம் என்பது எல்லாம் பொது தானே. உங்க வீட்டுல ஓடுற பேனுக்கு அரசு மானியத்துல மின்சாரம் தருது. ஏ.சிக்கும் தரணும்னு நினைச்சா முட்டாள்தனம் இல்லே" என்றோம். நண்பர் டீக்கடை வைத்திருக்கிறார். "2004ல ஒரு டீ என்ன விலை... இன்னிக்கு என்ன விலை" என்று கேட்டோம். "அன்னிக்கு மூணு ரூபாய்... இன்னிக்கு ஏழு ரூபாய்..."
"அன்னிக்கு சைக்கிள்ல வந்தீங்க. இன்னிக்கு டூவிலர்ல வர்றிங்க. வருமானம் எவ்வளவு கூடினாலும் - பேருந்து கட்டணம் உயரக்கூடாது, மின் கட்டணம் உயரக்கூடாதுன்னா என்ன நியாயம். தினசரி எவ்வளவுக்கு தண்ணியடிக்கிறிங்க" என்று கேட்டோம் "நொறுக்குத்தீனி எல்லாம் சேர்ந்து நூற்றிஐம்பது வரும்" "ஆக மாசம் நாலாயிரத்தி ஐநூறு. அது அநியாயமா தெரியல. ஆனா கரண்ட் பில் ஐநூறு ரூபாய் கட்டணும்னா வலிக்குதா"
"ஆனாலும் 37%சதவிதம் கூ(ட்)டி இருக்கிறதா கேப்டன் சொல்கிறாரே"
பிற மாநிலத்தில் உள்ள மின் கட்டண நிலவரத்தை பார்ப்பதும் நல்லது. (நன்றி:டைம்ஸ்ஆப்இண்டியா) இத்தனை அதிக (?) மின் கட்டணத்திற்கு பிறகும், இந்தியாவிலேயே மிக குறைந்த மின் கட்டணம் பெறும் வரிசையில் -இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த கட்டணம் பெறும் முதல் மாநிலமாக குஜராத் (சராசரி 3.30 ஒரு யூனிட்க்கு) உள்ளது. இரண்டாவது மாநிலமாக இப்போது தமிழகம் (3.42) உள்ளது. வெகு காலமாக முதலிடத்தில் இருந்தது. மூன்றாவது இடத்தில் கர்நாடகா (3.50), நான்காவது இடத்தில் (4.55)ஆந்திராவும், மற்றும் அதிகப்பட்சம் வசூலிக்கும் மாநிலமாக மகாராஷ்ரா(5.57) உள்ளது.மேலும் மிகவும் பின்தங்கிய மாநிலங்களான கம்யூனிஸ்ட் ஸ்பெஷல் மே.வங்காளம் (3.00) உ.பி (3.45) மற்றும் பீகாரை (1.40) விட - வீட்டு உபயோகத்திற்கான கட்டணம், தமிழகத்தில் (1.10) மிக குறைவாகவே உள்ளது. வீட்டு உபயோக மின்சாரத்திற்கு இன்னும் அரசு மானியம் கொடுத்து கொண்டிருக்கிறது. மின்கட்டண உயர்வு குறித்த பத்திரிகை செய்தியையும் வாசித்து விடலாம். மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ந் தேதி அமல் படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.புதிய கட்டண உயர்வு விவரம் :
100 யூனிட் வரை ரூ. 2.60 (அரசு மானியம் ரூ.1.50 - நுகர்வோர் கட்டணம் ரூ.1.10). தற்போது 1 யூனிட் 85 பைசா.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ. 2.80 (அரசு மானியம் ரூ.1.00,
நுகர்வோர் கட்டணம் ரூ.1.80)
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை ரூ.4.00 (அரசு மானியம் 50 பைசா - நுகர்வோர் கட்டணம் ரூ. 3.50). இதில், முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 3-ம், 201 வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ. 4-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
500 யூனிட்டுகளுக்கு மேல்- ரூ.5.75 (அரசு மானியம் கிடையாது) ஒவ்வொரு நுகர்வோரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை சேவைக் கட்டணம் என்ற முறையில் ரூ. 20 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு ரூ.4-லிருந்து. ரூ.5.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் சார்ந்த பணிகளுக்கு தனித்தனியே மின் கட்டணம். 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் கிடையாது. 200 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 மின் கட்டணம் வசூல் செய்யப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ.5.75 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.
மாதாந்திர குறைந்தபட்ச மின் கட்டணம் அனைவருக்கும் ரத்து செய்யப் பட்டுள்ளது. உதாரணமாக, 150 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.220 ஆக மின் கட்டணம் இருக்கும். 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.620 ஆக மின் கட்டணம் இருக்கும். 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.980 ஆக மின் கட்டணம் இருக்கும். 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,680 ஆக மின் கட்டணம் இருக்கும்.
அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோர் யூனிட்டிற்கு ரூ. 10.50 செலுத்த வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம், ஐ.டி. நிறுவனங்களிடமிருந்தும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது யூனிட்டுக்கு ரூ. 5.50 வசூலிக்கப்படும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை ச்ந்தித்து வருகிறது.
முன்னதாக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஆண்டுக்கு ரூ.9742 கோடி வருமானம் கிடைக்கும் அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது. "மின்சாரம் இல்லை. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். இது நியாயமா?" என்று எதிர்கட்சி தலைவர் கேட்கிறார் (போதையில்). உபயோகித்த மின்சாரத்திற்கு தான் கட்டணமே ஒழிய - உபயோகிக்காததற்கு அல்ல. "வாங்கும் பணத்திற்கு நிறைவான சேவை வழங்கட்டும் மின் வாரியம்" என்று கேட்டு கொள்கிறோம்.
/// "வாங்கும் பணத்திற்கு நிறைவான சேவை வழங்கட்டும் மின் வாரியம்" என்று கேட்டு கொள்கிறோம்.///
ReplyDeleteமின்சார வாரியம் கட்டண உயர்வுக்கு பிறகு கட்டாயம் செய்ய வேண்டியது.