.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 10, 2012

பாவம் செய்தவர்களும், பாவமன்னிப்பு தருபவர்களும்...

தண்டனை பெற்ற பிரபல மற்றும் வி.ஐ.பி கைதிகள் - தங்கள் அன்றாட வாழ்க்கையை சிறையில் எப்படி கழிக்கிறார்கள் என்பதை பத்திரிகைகள் விலாவாரியாக செய்தி வெளியிடுவதை கவனித்தவர்கள் ஒன்றை அவசியம் கவனித்திருக்கலாம். அந்த விலாவாரிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டென்றால் - அது, அந்த கைதிகள் படிக்கின்ற புத்தகம். அதென்னவோ தெரியவில்லை... சக மனிதர்களை துடிக்க, துடிக்க கொன்றவன், கற்பழிப்பில் ஈடுபட்டவன், குண்டு வைத்தவன் என்று படுபாதக செயல்களை செய்த சகலரும் சிறைக்கு உள்ளே போய்விட்டால், அவர்கள் படிப்பதென்னவோ வேத புத்தகங்கள் தான்.

எல்லா மத வேத புத்தகங்களும் இதில் அடங்கும். சென்னையை கலங்கடித்த கொலையாளி ஆட்டோ சங்கர் சிறைக்குள் போய் படித்தது பைபிளாம். சக மாணவன் நாவரசுவை துண்டு துண்டாக வெட்டிய ஜான் டேவிட்டும் பைபிள் தான் படிக்கிறானாம். பணக்காரர்கள் -​தன்னுடன் உல்லாசமாக இருப்பதை, ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த மாடல் அழகி பிடிபட்டு சிறைக்குள் சென்றதும் வாசிக்க துவங்கியது பகவத் கீதையையாம்... ஜெயேந்திர சங்கராச்சாரி உள்ளே போய் என்ன படித்திருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை. இதை போல -பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் - கொலை செய்து சிறை சென்ற ரபிக் என்பவர் சிறையில் குரான் வாசிக்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன் இதே போன்ற ஒரு செய்தியை தினசரி ஒன்றில் வாசிக்க நேர்ந்தது. "மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனராகப் பணியாற்றிய அந்த அதிகாரி, மொபைல்போன் வியாபாரியிடம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு எப்படிப் பொழுதைக் கழிக்கிறார்? அவர், பைபிள் படிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது." என்கிறது செய்திதாள். சிறையில் வேத புத்தகங்கள் வாசிப்பது அவரவர் சொந்த விஷயம் என்றாலும் - நேற்றுவரை கண்ணுலேயே தெரியாத புத்தகம் இன்றைக்கு எப்படி?

தவறு செய்பவனை கடவுள் காப்பாற்ற நினைத்தாலும் சட்டம் விடாது. சிறைச்சாலைகளில் நுழைகிற மத போதகர்கள் "கடவுளை(?) நம்பாமல் இருந்தது தான் - உங்களின் அனைத்து தவறுகளுக்கும் காரணம். கடவுளை நம்பி இருந்தால் இந்த தவறுகளை செய்திருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களை மன்னிப்பார். அவரை நம்புகிறவர்கள் மன்னிக்கப்படுவார்" என்று மூளை சலவை செய்து - மத நூல்களை விநியோகிக்கிறார்கள். குற்றவாளிகளும் - அவர்கள் விநியோகிக்கும் புத்தகங்களை பய பக்தியுடன் வாங்கி கொள்கிறார்கள்.

இதைவிட மற்றொரு பித்தலாட்டம் உள்ளது. "எங்கள் கடவுளை நம்பாமல் அந்த கடவுளை நம்பியது கூட குற்றம் செய்ததற்கு காரணமாம்" என்று சொல்வது. என்னே கண்டுபிடிப்பு. அந்த கடவுளும், மதமும் கோலோச்சும் நாட்டில் சிறைச்சாலைகளே இல்லையா? மதவாதிகள் அறிவு எவ்வளவு நுட்பமானது என்பதை அவர்களை குறித்து வாசிக்கும் போது வியக்க வைக்கிறது. இங்கே நம் மனதில் சில கேள்விகள் எழுகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது தான் அவனது எல்லா குற்றங்களுக்கும் காரணமா? வேதப்புத்தகங்கள் வாசிப்பதால் மட்டும் அவன் பாவங்கள் கழுவப்பட்டுவிடுமா?

"அவரை நம்புகிறவர்கள் - எப்படிப்பட்ட கொலைக்காரர்களாக இருந்தாலும் மன்னிக்கப்படுவார்கள்" என்றால் பாதிக்கப்பட்டவனுக்கு - அந்த கடவுள் மிக பெரிய அநீதியை அல்லவா செய்கிறார். லஞ்சம் வாங்கி கொண்டு குற்றவாளியை தப்பிக்க செய்வதை விட கேவலமல்லவா - கடவுள் இப்படி செய்வது. ஒரு குற்றத்தை நடப்பதற்கு முன்பே தடுக்க வலுவில்லாத கடவுளை என்னவென்று சொல்வது. பாவம் செய்வதை தடுக்க இயலாதவன் - பாவ மன்னிப்பு தருவானாம். வியப்பாக இல்லை. ​கடவுளை நம்பாதது தான் குற்றங்களுக்கு காரணம் என்றால் இதற்கு பதில் என்ன?

"ஜெயேந்திரர் சங்கராச்சாரியாகட்டும் அல்லது அன்றாடம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் பாதிரிமார்கள், மதபோதகர்கள் ஆகட்டும்" அனைவருமே -தங்களை கடவுளுக்கே நெருக்கமானவர்களாக காட்டி கொண்டவர்கள் தானே. சரியாக சொல்வதானால் பலருக்கு பாவ மன்னிப்பு தந்தவர்கள். தவறு செய்தவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணியவர்கள். தூரத்தில் இருக்கும் தம் மத ஆட்கள் குற்றம் செய்வதில் இருந்து கண்காணித்து தடுக்க கடவுளுக்கு நேரமாகலாம் அல்லது அதிகரிக்கும் ஜனத்தொகைக்கேற்ப்ப துரிதமாக செயல்பட்டு தவறுகளை தடுக்க கடவுளால் இயலாமல் இருக்கலாம்.

லட்சக்கணக்கான காவல்துறையினர் இருந்தும் குற்றங்களை தவிர்க்க இயலாதபோது, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருக்கும் கடவுள்களால் குற்றங்களை ஒரேயடியாக எப்படி தடுக்க முடியும். சிலை வடிவில் இருக்கும் காமாட்சிக்கும், யேசுவுக்கும் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கும் - சாமியார்களின், பாதிரியார்களின் அயோக்கியதனங்களை தடுக்க முடியவில்லையே. தங்கள் முன் காமக்களியாட்டம் செய்த தேவநாதனையோ,  ஜெயபாலையோ ஓங்கி அறைய முடியவில்லையே கடவுள்களால்?

இது தான் கடவுளின் யோக்யதை. மனிதர்கள் தானே ஆண்டவர் முன் நடக்கும் தவறுகளை கூட தட்டி கேட்க வேண்டி உள்ளது. அப்படி இருக்க கடவுளுக்கு இங்கே இடமேது. செய்யக்கூடாத அக்கிரமங்களை எல்லாம் செய்து விட்டு பிராதித்தால் கடவுள் காப்பாற்றிவிடுவானாம். மனிதர்களின் நீதிமன்றத்தில் - நிச்சயம் கடவுள்களுக்கு வேலையே இல்லை. கடவுள்களால் ஜெயிக்கவும் முடியாது.
தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

 1. மிகச் சரியான கருத்துக்கள். நல்ல அலசல்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. மிக சரியாக சொன்னீர்கள்.சிறந்த பதிவு.

  ReplyDelete
 3. எனக்கென்னவோ உங்கள் மற்ற பதிவுகளில் இருக்கும் அழுத்தம் இதில் ரொம்ப குறைவென்றே படுகிறது...

  நேரமின்மையா?

  ReplyDelete
 4. ரெவெரி,

  அப்படியா? சரியாக எழுதி இருப்பதாகவே நினைக்கிறேன். வருகைக்கு நன்றி ரெவெரி.

  ReplyDelete
 5. ஓசை நாத்திகவாதியாம். நம்பிட்டன்.

  ReplyDelete
 6. Anonymous said...

  ஓசை நாத்திகவாதியாம். நம்பிட்டன்../////


  இன்னும் உங்க அளவுக்கு தேர்ச்சி அடையல.அதான் சந்தேகமா சொல்றிங்க போல் இருக்கு. லஞ்சம் வாங்குறவனோட, குண்டு வைக்கிறவனோட - சாதி, மதம் பார்த்து விமர்சனம் வைக்கிற அளவு என் பகுத்தறிவு வளரவில்லை என்பதை நினைக்கும்போது தான் மிக கேவலமாக உள்ளது.

  ReplyDelete
 7. சிந்தித்தால் எல்லாம் பிராடு வேலைதான்....என்பது புரியும்!

  ReplyDelete
 8. ஓசை, இந்த நாத்திகம் போதும். மெத்த படிச்ச பகுத்தறிவாளியாயிட்டா - கற்பழிச்சது பாதிரியாரா, சாமியாரான்னு பார்த்து கண்டன குரல் கொடுப்பீங்க - எங்க வீரமணிகளை போல.

  ReplyDelete
 9. Anonymous said...
  ஓசை, இந்த நாத்திகம் போதும். மெத்த படிச்ச பகுத்தறிவாளியாயிட்டா - கற்பழிச்சது பாதிரியாரா, சாமியாரான்னு பார்த்து கண்டன குரல் கொடுப்பீங்க - எங்க வீரமணிகளை போல../////

  என் அறிவு கண்ணை திறந்ததற்கு நன்றி...நன்றி...

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails