.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

April 24, 2012

மம்தா பானர்ஜியும், கார்ட்டூன்களும், சர்ச்சைகளும்...

மம்தா பானர்ஜியை கேலிசித்திரம் வரைந்தவர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஒரு கார்ட்டூனுக்கு கைது நடவடிக்கையா என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளையோ அல்லது பிரபலங்களையோ - அநாகரீகமாய் கேலி சித்திரம் வரைவது சரி தானா? நாகரீகம்மா? அப்படி கேலி சித்திரம் வரைந்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் அடிதடியில் இறங்குவதும் முறை தானா? நிச்சயம் ஆராய வேண்டிய விஷயங்களே.

அதற்கு முன் மே.வங்க முதல்வர் மம்தா மற்றும் கேலி சித்திரம் குறித்த செய்திகளை பார்ப்போம். "மேற்கு வங்காள மாநிலத்தில் கார்ட்டூன் விவாதத்தில் சிக்கிய பேராசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி அரசின் செயல்பாடுகளை விமர்சித்து இணையதளங்களில் கார்ட்டூனை பரப்புரைச் செய்தார் என்ற குற்றம் சாட்டி ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா மற்றும் அவரது அண்டை வீட்டுக்காரர் ஆகியோரை போலீஸ் கைது செய்திருந்தது.

முதலமைச்சரின் புகழுக்கு களங்கம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்கலைக் கழக பேராசிரியர்களும், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் பேராசிரியர் அம்பிகேஷ் மீது நான்குபேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் தொடர்பாக அமித்சர்தார், அருப்முகர்ஜி, நிஷிகாந்த்கோரே, ஷேக்முஸ்தஃபா ஆகிய நான்கு பேர் கைது செய்யபட்டனர்.

இவர்களில் அமித்சர்தார், அருப்முகர்ஜி ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆவர். "தனக்கு எதிராக கேலிச் சித்திரங்களை வரைந்து இணைய தளத்தில் உலவ விட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த கைதிற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன."

எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கிறவரை தானே கருத்து சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குவார்கள். அவர்களே ஆளுங்கட்சியானால் "ஆத்திரமூட்டும் செயல்" என்று ஆத்திரப்படுவார்கள். அதனால் அரசியல்வாதிகள் பேச்சை வைத்து எவரையும் தலையில் தூக்கி வைத்து ஆடவும் முடியாது. தூற்றவும் முடியாது. பொதுவாக கேலி சித்திரங்களை வரைவது சரி தானா? சரி என்றால் - அதை எவ்வளவு தூரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

நிச்சயம் அரசியல்வாதிகளிலோ அல்லது கேலி சித்திர வட்டத்துக்குள் சிக்கும் ஏனைய பிரபலங்களோ - ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளலாம். சிலர் அவை தங்களை புண்படுத்துவதாக, மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கருதலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட படத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாதாகவோ கருதுபவர்கள் திருப்பி அடிக்கத் தான் செய்வார்கள். வாங்கி கட்டிக்கொள்ள தயாராக இருப்பவன் வரைந்து தள்ளலாம்.

பல நேரங்களில் - ஒரு கேலி சித்திரம் பொது அமைதிக்கு சேதம் விளைவிப்பதாக இருப்பதால் - கேலி சித்திரங்கள் கேள்விக்கு உட்பட்டே ஆக வேண்டும். பெயரிலேயே "கேலி" சித்திரம் வரும்போது - அதை எப்படி சாதாரணமான ஓவியமாக எடுத்து கொள்ள முடியும். அந்த வகையில் மம்தாவால் சாதாரணமாக எடுத்து கொள்ள இயலவில்லை. அவர் சொல்கிறார் இப்படி.

 "நான் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. எனக்கு யாரும் தீங்கு இழைத்தால் அதைப் பொருத்துக் கொள்ளவும் மாட்டேன்!" ஆக, மம்தா அதை கேலி சித்திரமாக மட்டும் பார்க்கவில்லை. "யாருக்கும் கேலியோ, தீங்கோ செய்யாத என்னை - இப்படி ஏன் கேலிசித்திரம் தீட்டி இழிவு செய்கிறார்கள்" என்று கேட்கிறார். ஏற்று கொள்ள வேண்டியது தான். இது ஒரு இயல்பான மனித சுபாவம். "நானும் யாரையும் கேலி பேச மாட்டேன். என்னையும் யாரும் கேலி பேசக்கூடாது" என்று நினைப்பது. "வம்பு சண்டைக்கும் போக மாட்டேன். வந்த சண்டையையும் விடமாட்டேன்" என்கிற சித்தாந்தம் தான்.

மேலும் பெண்களுக்கு "பிறர் தம்மை கேலி பேசுவது பிடிக்காது" என்பது ஒரு இயல்பான குணம் எனில், தமக்கு தலைமை வகிப்பது பெண்ணா என்கிற சிந்தனை கூட - சில ஆண்களின் காழ்ப்புணர்ச்சி கேலி சித்திரங்களாக உருப்பெறுகிறது. அதன் எதிரொலி தான் இங்கே வெளியிடப்பட்ட "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்" என்கிற ஜெ குறித்த கட்டுரை. அதற்கு ஆதரவாக ஆயிரத்தெட்டு கட்டுரைகள் வேறு. முதல் கேலி சித்திர விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில் மற்றொரு கேலிசித்திரம் - மம்தாவை இழிவு படுத்தி. "மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி குறித்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டதாக 2 பேருக்கு எதிராக மிட்னாப்பூர் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நமது முதல்வர் அவரது தலையை இழந்துவிட்டார் என்ற குறிப்புடன் மமதா பானர்ஜியின் தலை இல்லாத கார்ட்டூனை புருலோய் மித்ரா மற்றும் சின்மய் ராய் ஆகியோர் மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளதாக மருந்தியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிக்ராம் சகா கோட்வாலி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்" இந்த இரண்டாவது புகாரின் மேலதிக நடவடிக்கை பற்றி தெரியவில்லை. நிச்சயம் இது சீண்டும் வேலையன்றி வேறில்லை.

 மேலும் சரியாக பதிலடி தர தெரியாத தலைவர்களுக்கு தான் விமர்சனங்களால், கேலி சித்திரத்தால் மன உளைச்சல். ஒரு உதாரணம். நம் ஊர் மூத்த தலைவர் - ஒரு தினசரியின் செய்திக்கு பதில் அறிக்கை இப்படி  தருகிறார்  . "அந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு பிறந்திருந்தால்" என்று. இத்தகையவர்கள் அடுத்து எவருக்காவது அவரை பற்றி கட்டுரை எழுத மனம் வருமா? கேலி சித்திரம் தீட்ட தைரியம் வருமா? கேலி சித்திரத்தையே கேலி பேசுபவர்கள். ஓவியன் என்பவன் நாகரீகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அவனது கேலி சித்திரத்தில் "உண்மைகள் தான் தெரியவேண்டுமே ஒழிய கேலி தெரியக்கூடாது."

இன்றைக்கு கேலி சித்திரங்கள் அவ்விதமாகவா உள்ளது. கேலி சித்திரம் வரைபவர்களுக்கு முதலிலேயே ஒரு அறிவுரை அல்லது வேண்டுகோள். பிறர் உங்களை கேலி செய்தால் கோபப்படும் ரகமா? அப்படி என்றால் யாரையும் கேலி சித்திரம் வரையும் தகுதியை இழக்கிறிர்கள். "உங்களுக்கு வலிப்பது அடுத்தவருக்கு மட்டும் இனிக்குமா?" மேலும் கேலி சித்திரங்கள் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் வரையப்படாததாக இருக்க வேண்டும். உண்மைகளை உரத்து சொல்ல வேண்டும். இன்றைக்குள்ள கேலி சித்திரங்கள் அப்படியா உள்ளது.

எல்லாவற்றிலும் அணி பிரிந்துள்ளது போல - சுய விருப்பு வெறுப்பு, வேண்டியவன், வேண்டாதவன், சாதி இனம் மதம் துவேஷம் என்கிற அடிப்படையில் தான் கேலி சித்திரங்கள் தீட்டப்படுகிறது.பத்திரிகைகளின் பெயரை கேட்டாலே - எது, எது எந்த பிரிவு என்பதை புரிந்து கொள்ளலாம். கேலி சித்திரங்கள் - தினமலரில் எப்படி வரும், விடுதலையில் எப்படி வரும் என்பது தெரிந்தது தான். இவர்களின் பித்தலாட்ட கேலி சித்திரம் தான் உண்மையை உரைக்க போகிறதா?


கேலி சித்திரம் வரைய உரிமை இருக்கலாம் உங்களுக்கு. ஆனால் யாரையும் புண்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்கள் சித்திரத்தால் - பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் - அதற்கான பலனை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும். நாட்டில் பிரச்சனைகளே இல்லை பாருங்கள் - அதனால் நீங்கள் புதுசாய் எதையேனும் ஏற்படுத்தி  விடாதிர்கள்  .

பதிவில் இணைக்கப்பட்டுள்ள கேலி சித்திரங்கள் இணையத்தில் சேகரிக்கப்பட்டவை. யாரையும் அநாகரீகமாய் தீட்டப்படாதவை. 
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. நம்நாட்டு அரசியல்வாதிகள் தற்போது இருக்கும் நிலையில் அனைத்து வகையிலும் கடுமையாக விமர்சிக்க பட வேண்டியவர்களே. அவ்வாறு விமர்சித்து வெளிச்சம் காட்டாவிட்டால் சட்டத்தின் ஆட்சி நடைபெறாது, நாட்டை கெடுத்துவிடுவார்கள். பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். அரசியல்வாதிகளின் அனைத்து பொது செயல்களும் விமர்சனங்களுக்கும் கேலி சித்திரத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவ்வாறு செய்பவர்கள் செய்வது தங்களின் சனநாயகத்தின் கடமைகளை செய்கிறார்கள், வரும் பின்விளைவுகளை சட்டத்தின் துணைக்கொண்டு எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் குடிமகனுக்கு அழகு.

    அரசியல்வாதிகளின் தனி வாழ்க்கை விமர்சிக்க பட வேண்டுமா என்று கேள்விக்கு, கொள்ளையடிக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை ஏழு தலைமுறைக்கு வாழ எத்தனிக்கும் போது, அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை குடும்ப உறுப்பினர்கள் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியவர்களே.

    ReplyDelete
    Replies
    1. வரம்பு மீறுதல் மற்றும் காழ்ப்புணர்ச்சி போன்றவையும் விமர்சனத்தில், கேலி சித்திரத்தில் உள்ளது. அத்தகையவற்றையே தவிர்க்க சொல்கிறேன். நன்றி நரேன்.

      Delete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails