.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

May 14, 2012

வழக்கில் சிக்கிய வழக்கு எண் 18/9...

அனைவரின் ஆதரவையும் பெற்ற "வழக்கு எண் 18/9" திரைப்படத்தில் இடம் பெற்ற "வானத்தையே எட்டி பிடிப்பேன்.  பூமியையும் சுத்தி வருவேன்" என்கிற பாடலுக்காக இப்போது சர்ச்சை ஒன்று கிளப்பி இருக்கிறது. தண்டபாணி பாடிய அந்த பாடலுக்கு உரிமை கோரி இருக்கிறார் ஜெயசீலன் என்பவர். அது குறித்த நக்கீரன் இதழின் தகவல்

"என் பேரு ஜெயசீலன் என்கிற ஜெய். என் மனதை கொள்ளையடித்தாள்" என்கிற படத்தை 27.01.2010 - இல் ஏவி.எம் ஸ்டூடியோவில் பூஜை போட்டு தொடங்கினேன். கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் நான் தான். 28.10.2010 இல் இந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவை சென்னை காமராஜர் அரங்கில் நடத்தி, பாடல்கள் அடங்கிய குறுந்தகடையும் வெளியிட்டோம். இந்த குறுந்தகட்டில் "அந்த வானத்தையே எட்டிப்பிடிப்பேன்" பாடலும் இருக்கு. ட்யூனு ம் அப்படியே இருக்கு.

"வழக்கு எண் 18/9" ஆடியோ ரிலீஸானபோதே தற்செயலாக என் பாட்டு இதில் இடம் பெற்றிருந்ததால் படத்தை தயாரித்த டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிக்ஸர்ஸ் மற்றும் யூடிவி நிறுவனத்துக்கு புகார் கடிதமும், என் படத்தோட ஆடியோ சி.டியையும் அனுப்பிவச்சேன். "தண்டபாணிங்கிற புது கவிஞருக்கு வாய்ப்பு கொடுக்கும் நல்ல நோக்கத்தில் கூட அந்த பாட்டை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அது என் பாட்டு என்கிற ஆதாரத்தை பார்த்த பிறகு அந்த பாடலை நீக்கியிருக்கலாம்.

ஆனால் பண பலம் கொண்ட அவர்கள் "என் பாட்டை ஜெய் திருடிட்டார்னு " தண்டபாணிய வச்சு என் மேல் பள்ளிக்கரணை போலீஸில் பொய் கேஸ் கொடுத்தாங்க. இன்ஸ்பெக்டரும் என்ன மிரட்டினார். ஆனால் எல்லா ஆதாரங்களையும் பக்கவா கமிஷனர் ஆபீஸில் சப்மிட் பண்ணினேன். இப்போ மடிப்பாக்கம் ஏ.சிக்கு ஃபார்வேர்டு பண்ணிருக்கு. கமிஷனர் ஆபீஸ் என் படைப்பு திருடப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கேன்"(வழக்கு எண் 286) என கண்ணீரோடு சொன்ன ஜெய், எல்லா ஆதாரங்களையும் நம்மிடமும் கொடுத்தார்.

"என் மனதை கொள்ளையடித்தாள்" பாடலை கேட்டுவிட்டு 'வழக்கு எண் 18/9' பாடலையும் கேட்டோம். ஜெய் ஒரே சரணமாக எழுதிய வார்த்தைகளை தண்டபாணி, "மானே, தேனே" மாதிரி சில வார்த்தைகளை போட்டு இரண்டு சரணமாக்கி இருக்கிறார். மற்றப்படி அதே ட்யூன். அதே வார்த்தைகள்.
பட ரிலீசுக்கு முன்பே ஜெய் ஆதாரங்களை அனுப்பியும் அது பற்றி பரிசீலிக்காதது ஏன்?


"வழக்கு எண் 18/9 " படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸிடம் கருத்து கேட்க விரும்பினோம். "சார்கிட்ட இது பத்தி கேட்டு சொல்றோம்" என்றவர்கள். அதன் பின் சுபாஷின் செல் நம்பரை கொடுத்தார்கள். பல முறை தொடர்பு கொண்டும் அவர் பதில் தரவில்லை. வழக்கு எண் 286 விசாரணைக்கு வரும்போது கோர்ட்டில் சொல்லி தானே ஆக வேண்டும்" என்கிறது நக்கீரன் செய்தி.

பாடியவர் பெயரில் தான் தண்டபாணி என்றுள்ளது. பாடலாசிரியர் பெயரில் தண்டபாணி இல்லை.படைப்பு திருட்டு திரை உலகிற்கு புதிதல்ல. கே.பாலசந்தர் மீது கூட, அவரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தின் கதைக்காக சர்ச்சைகள் எழுந்தது. பாடல் என்று வரும்போது - காதல் கோட்டை திரைப்பட பாடலுக்காக அகத்தியன் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. "நலம் நலமறிய ஆவல்" பாடலில் வரும், "நீ இங்கு சுகமே... நான் அங்கு சுகமா..." என்கிற அறிவுமதியின் வரிகளை அகத்தியன் எடுத்துவிட்டதாக சொல்வார்கள்.

படைப்பு திருட்டு செய்வதன் மூலம் - அவனது கனவை, வாழ்க்கையை நிர்முலமாக்குகிறோம். ஒரு கலைஞனுக்கு சமாதி கட்டுகிறோம். பொருளை திருடுபவனை கூட மன்னிக்கலாம். மன்னிக்க முடியாத - பிறரின் கற்பனையை திருடுவது. 80கள் வரை திரை உலகில் படைப்பு திருடப்படுவதான சர்ச்சைகள் பெருமளவு இல்லாமல் இருந்தது. கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை இருந்தது. அதற்கு பாரதிராஜாவே மிக பெரிய உதாரணம். தம் திறமைமிக்க உதவியாளர்களை கதாசிரியர்களாக்கி அழுகு பார்த்தார். பாக்யராஜ்(புதிய வார்ப்புகள்), மணிவண்ணன்(அலைகள் ஓய்வதில்லை), பாபு(என்னுயிர் தோழன்), ரத்னகுமார்(கிழக்கு சீமையிலே), சீமான்(பசும் பொன்) என்று தொடர்ந்தது. ஆனால் இன்றைக்கு உதவியாளர்களின் படைப்பை திருட தயங்குவதில்லை.

ஒரு முறை லியாகத் அலிகான் என்கிற கதாசிரியர் - கே டி.வியில் பேட்டி கொடுத்த போது - தம் கதையை எடுத்து, நடிகர் மற்றும் இயக்குனருமான சந்திர சிவமான ஒருவர் தம் பெயரில் போட்டு கொண்டார் என்றார். இன்றைக்கு வாய்ப்பு கிடைப்பதே குதிரை கொம்பு. சொல்லப்படும் விஷயம் திருடப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம். தமிழ் திரை உலகம் - இன்று அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறது. காரணம் "கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்" இந்த நான்கின் கீழ் தம் பெயரே வர வேண்டும் என்கிற அற்ப ஆசை தான். (விதிவிலக்காக சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்)

விளைவு. புதிய கதாசிரியர்கள் உருவாகவில்லை. 90கள் வரை கதை,வசனம் எழுதுவது மட்டும் சிலரின் பணியாக இருந்தது. இன்றைக்கு கதாசிரியர்களாக யாருமில்லை. அப்படி அற்புதமான படைப்பாளிகளாக எவரேனும் இருந்தால் கூட அவர்களும் - இயக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் தான் கதை சொல்ல வாய் திறக்கிறார்கள். மலையாளத்தில் சிறந்த கதாசிரியர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

முதல் படத்தை கஷ்டப்பட்டு வெற்றிபடமாக்கிவிடுபவர்கள் - கதை பற்றாக்குறையால் சரக்கில்லாமல் இரண்டாவது படத்தில் தோற்று போகிறார்கள். பிறரின் கதையை இயக்குவது கேவலமா? பிறரின் கதையை திருடி இயக்குவதை விட கேவலமல்லவே. சக படைப்பாளியின் படைப்பை திருடுவது "அமில வீச்சை" விட கொடூரத்தன்மை வாய்ந்தவை அல்லவா.
தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

 1. தமிழ் சினிமாவின் தரமின்மைக்கு சரியான காரணத்தை சுட்டி காட்டுகிறது இந்த பதிவு.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தானே. தம் படைப்பு எங்காவது திருடப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் இருந்து கொண்டே இருந்தால் - நல்லதொரு படைப்பை யாரால் தான் தர முடியும்.

   Delete
 2. பாலாஜி சக்திவேல் ஆரம்பத்தில் இருந்தே கதை திருடித்தான் படம் எடுத்து வருகிறார் என செய்திகள் உலாவி வருகிறது,

  சமுராய் & சிட்டிசன் ஒரே கதை, சரவண சுப்பையா இவருடன் ஷங்கரிடம் உதவியாளாராக இருந்தார்,அப்போது பேசும் போது சுட்டு விட்டார் என பேச்சு உண்டு.

  காதல் படத்தின் கதை பிருந்தா சாரதியுடையது என பிரச்சினை வந்தது.

  இப்போது வழக்கு எண் பாடல். கதை கூட ஒரு ஆங்கில டாக்குமென்டரியின் அடிப்படையிலேயே.கேத்தே-மை பியூட்டிஃபுல் ஃபேஸ் என்ற டாக்குமென்டரி.

  ReplyDelete
 3. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 4. ##80கள் வரை திரை உலகில் படைப்பு திருடப்படுவதான சர்ச்சைகள் பெருமளவு இல்லாமல் இருந்தது.## அந்தக் காலத்தில் பலரும் மாற்று மொழித் திரைப்படங்களைப் பார்க்காததாலேயே படைப்புகள் சுடப்பட்டதை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்ததற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன். படைப்புகளைச் சுடுவதில் கில்லாடியாக கமலே இருந்துள்ளார். மகாநதி, நாயகன்,குணா என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. எந்த லிங்க் இல் சென்று பார்க்கவும். http://factsarena.blogspot.com/2010/09/tamil-films-copy-cat.html
  மேலுள்ள link இல் உள்ளவை ஆங்கிலப் படங்களில் இருந்து சுடப்பட்டவை. இன்னும் தெலுங்கு,மலையாளம்,கர்நாடகம்,ரஸ்யா,சீனா என்று ஒப்பிடப் போனால் இன்னும் பல படங்களின் முகத்திரையும் கிழியக் கூடும். பாட்சா படமும் தெலுங்குப் படமொன்றின் copy என்று கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்த முடியவில்லை.
  ஆனாலும் இதில் இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும்..... கமல் போன்றவர்கள் வெளிநாட்டுப் படங்களைக் கோப்பி அடித்தேனும் மகாநதி போன்ற படங்களை எடுக்காவிட்டிருந்தால், தமிழ் சினிமா இன்றும் தெலுங்கு சினிமாவுடனேயே போட்டி போட வேண்டியிருக்கும்....... வழக்கு எண் 18/9 , எங்கேயும் எப்போதும், சுப்பிரமணியபுரம்........and எந்திரன் போன்ற படங்களைக் கண்டிருக்காது.............

  ReplyDelete
  Replies
  1. வசந்தத்தில் ஒரு நாள் என்கிற படத்தில் சிவாஜி, தன் மகளை விபச்சார விடுதியிலிருந்து மீட்பார். மகாநதியிலும் அதே. 80களில் கதாசிரியர்கள் நிறைய இருந்தார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் கதை இலாகா என்றொரு பிரிவு இருக்கும். கதாசிரியர்கள் கதை, வசனம் எழுதுவதுடன் திருப்தி பட்டார்கள். இயக்குனராக விரும்பவில்லை. மசாலா படங்கள் மாத்திரமே - வெளிநாட்டு படங்களை தழுவி எடுப்பார்கள்.

   Delete
 5. வழக்கு எண் கதையைக் கூட வேறு ஒருவரின் கதை என்று பேச்சு வருகிறது.ஆனாலும் திரைக்கதை ஒன்று இருக்கிறது.அது பாலாஜிதான் செய்திருக்கவேண்டும.

  ReplyDelete
 6. கதையைத் திருடும் இயக்குனர்கள் அட்லீஸ்ட் கதை என்று தன் பெயரைப் போட்டுக் கொள்ளாமலாவது இருக்கலாம். பாட்சா படம் “ஹம்” இந்திப் படத்தின் உல்டா. அந்த இந்திப் படத்தில் போலீஸ் தம்பி வேடத்தில் நடித்தது ரஜினி! கதையை சுட்டு விட்டாலே திரைக்கதையும் சில சீன்களாவது கூடவே வந்துவிடும் - தெய்வத் திருமகள் போல். பாலாஜி சக்திவேல் லிங்குசாமியின் காலில் விழுந்ததிலிருந்தே நிறைய சமாச்சாரங்கள் தெரிகின்றதே!

  ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails