.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

May 17, 2012

ஒரு கண்ணீர் கடிதம் (ஜெ ஆட்சி - ஒராண்டு நிறைவு)

ஜெயலலிதாவின் ஒராண்டு ஆட்சி நிறைவை ஒட்டி எங்கெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களோடு - அ.தி.மு.க வினரின் கொண்டாட்டங்களை காண முடிந்தது. தின(மலர்)சரி களில் பக்க பக்கமாக அ.தி.மு.க ஆட்சியின் சாதனை விளக்க விளம்பரங்கள்... எதிர் தரப்பு பத்திரிகையோ "உயிரோட இருக்கோம். வேற சொல்றதுக்கு ஒண்ணுமில்லை" என்கிற ரீதியில் - ஆட்சியை பற்றி மக்கள் கருத்துகள் சொல்வதாக சொல்கிறது. தொலைக்காட்சிகளில் - ஜெ சாதனை படைப்பதாக ஒரு சாராரும், வேதனை படைப்பதாக ஒரு சாராரும் சொல்கின்றனர்.

ஊடகங்களிடம் இரட்டை முகம் உள்ளது. கருத்து சொல்பவரிடமும் "தி.மு.க என்றால் ஒரு வித விமர்சனமும், அ.தி.மு.க என்றால் ஒரு வித விமர்சனமும்" என்கிற இரட்டை நாக்கு உள்ளது. சரி, யார் சொல்வதை நம்புவது. சாமானியனின் மனநிலையை - ஊடகங்கள் சரியாக பிரதிபலிக்கிறதா? பல சமயங்களில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரிதாக பிரதிபலித்த ஒரு விஷயம் இது. சில வாரங்களுக்கு முன் வாசித்த - தினசரியில் வந்த ஒரு கடிதம் கண் முன் நிழலாடுகிறது.

அப்போதே பதிவிட நினைத்தது. இப்போது ஜெவின் ஒரு ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் அந்த கடிதமே - ஜெ ஆட்சியின் காட்சி. "நடுத் தெருவுக்கு வந்து விட்டேன்!' என்கிற தலைப்பில் கே.ஏ.கதிரேசன் என்பவர், சிவகாசியிலிருந்து எழுதிய கடிதம்.  

"நான் சிவகாசியில் தனியார் பட்டாசு கம்பெனியில் வேலைபார்த்து வந்தேன். என்னுடைய பையனை எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிக்க வைத்தேன். படித்து முடித்த பின், வேலை நிமித்தம் பெங்களூரு செல்ல இருந்தவனைத் தடுத்து, சிவகாசியில் சொந்தமாக சிங்கிள் கலர் ஆப்செட் மிஷின் வாங்கிக் கொடுத்து நடத்தக் கூறினேன். அது எவ்வளவு தவறான காரியம் என நினைத்து, தற்சமயம் மிகுந்த வேதனை அடைகிறேன். ஆப்செட் மிஷின் வாங்க நான்கு லட்ச ரூபாய், கட்டிங் மிஷின் மற்றும் இடவாடகை அட்வான்ஸ் ஒரு லட்சம். ஆக, ஐந்து லட்ச ரூபாய்க்கு வங்கியில் வீட்டை வைத்து, 2.5 லட்ச ரூபாய் லோன் வாங்கி, தொழில் ஆரம்பித்துக் கொடுத்தேன்.

இரண்டு வருடம், ஏதோ எப்படியோ வண்டி சறுக்காமல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்சமயம், மின்வெட்டு என்ற பெயரால், என்னைத் தாக்கும் பூதத்தால், அதைத் தாங்கும் சக்தி இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து, தெருவிற்கு வந்து விடும் நிலை வந்துவிடும் போல் தெரிகிறது. காலை, 9 முதல், மாலை, 6 மணிவரை வேலையாட்கள் வேலை நேரம். மாலை, 6 முதல், இரவு, 10 மணிவரை ஓ.டி., இங்கு காலை, 8 மணி முதல், 11 மணிவரை, மதியம், 1 முதல், 4.30 வரை, மாலை, 6.15 முதல், 7.15 வரை இரவு, 9 முதல், 9.45 வரை மின்வெட்டு. ஐயா, நான் எப்படிப் பிழைக்க முடியும்?

என்னுடைய மிஷினில், 10 ரிம் பேப்பர் பிரின்ட் செய்ய, 1.30 மணி நேரமும், மேட்டர் தயாரிக்க அரை மணி நேரமும், ஆக இரண்டு மணி நேரமாகிறது. எனக்கு மின்சாரம் கிடைப்பது, ஒரு நாளில், ஐந்து மணி நேரம் மட்டும். இதில், 20 ரிம் தான் பிரின்ட் செய்ய முடிகிறது. இதற்கு கூலி கிடைப்பது, 400 ரூபாய் மட்டும். செலவு போக கிடைப்பது, மிக சொற்ப்பமே! நானும் கடந்த மூன்று மாதங்களாக வங்கிக் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல், மீண்டும் ஒரு தனியார் கம்பெனியில், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் சம்பளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

கொடூர மின் வெட்டால், என் மகனும் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல், நடைபிணமாக இருக்கிறான்.வரும் லோக்சபா தேர்தலில் இதன் எதிரொலி, அ.தி.மு.க.,வுக்குத் தெரியவரும்!" இந்த கடிதம் சுயதொழிலால் தம் வாழ்க்கையை தொலைத்த லட்சக்கணக்கான சாமானியரின் கதை. வாழ்க்கை போராட்டம். மின்வெட்டால் பாதிக்கப்பட்ட சிறு, குறுந்தொழில் செய்யும் அனைவரின் நிலையும் இன்று இது தான். சரி. இந்த கடிதம் எந்த பத்திரிகையில் வந்தது என்பது தானே முக்கியம்.

அப்போது தானே, கடிதம் - காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வந்ததா அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி குவியலா என்பது விளங்கும். இன்றைக்கு ஜெவின் ஆட்சி சாதனையை பக்க பக்கமாக விளம்பரமாக வெளியிட்டு, லட்ச லட்சமாக வருவாய் பார்த்திருக்கும் தினமலரில் தான் அந்த கடிதம் வந்தது. "பூணூல் பற்றின்" காரணமாக அந்த கடிதத்தை தினமலர் வெளியிடாமல் இல்லை. நடுநிலை என்றால் என்னவென்று புரியாதவர்கள் புரிந்து கொள்ளட்டும். விடுதலையில் - சென்ற ஆட்சியில் இப்படியொரு கடிதம் வந்திருக்குமா? ​

நன்றாக தொழில் நடந்தால் விலைவாசி உயர்வை கூட மக்கள் எப்படியோ சமாளிக்கக்கூடும். ஆனால் தொழிலுக்கே வேட்டு வைக்கும் மின்தடையை எப்படி சமாளிப்பது. "தமிழகத்திற்கு தேவை 12,000 மெகாவாட். ஆனா கிடைப்பதோ 8,000 மெகாவாட்" என்றெல்லாம் அரசு க(தை)ணக்கு சொல்லி கொண்டிருக்க கூடாது. மக்களுக்கு அது தேவையுமல்ல. "அன்றாடம் என் பிழைப்பையே நிர்முலமாக்கும் மின்தடையை தீர்க்காத அரசு என்ன அரசு" என்று தான் மக்கள் கேட்பார்கள். "என்ன சொல்லி வோட்டு கேட்டீங்க" என்றும் கேட்பார்கள்.

இலவசங்களை கொடுத்து மக்களின் வாயை மூட வைத்து விடலாம் என்றோ அல்லது தலையில் மிளகாய் அரைத்து விடலாம் என்றோ எண்ணிவிடக்கூடாது ஆட்சியாளர்கள். "டி.வியை வாங்கி கொண்டு கலைஞருக்கு டாட்டா காட்டியது போல" உங்களிடமும் மிக்ஸி, மின்விசிறி வாங்கி கொண்டு, உங்களுக்கும் டாட்டா காட்டி  ஓய்வு தந்து விட முடியும். மக்கள் எதிர்பார்ப்பை நிறை வேற்றுங்கள். இன்னும் நான்காண்டு காலம் உங்களுக்கான வாய்ப்புள்ளது.
தொடர்புடைய பதிவுகள் :


0 comments:

Post a Comment

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.


மறுமொழி வெளியாக சில நேரங்களில் தாமதமாகலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails