.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

July 17, 2012

கடன் வாங்காமல் வாழ இயலாதா?





"கடன் வாங்கலாமா? கூடாதா? என்பது விவாதமாகிவிட்டது இன்று. கடன் வாங்குவது தப்பு என்று ஒரு சாராரும், கடன் வாங்குவதில் என்ன தப்பு "என்று ஒரு சாராரும் சொல்கிறார்கள். "கடன் அன்பை முறிக்கும்" என்று எழுதி இருந்த வாசகங்கள் - இன்று வங்கிகளால் "கடன் அன்பை வளர்க்கும்" என்று மாற்றி எழுதப்படுகின்றன. சரி கடன் வாங்குவது சரியா... தவறா... என்கிற என் கருத்துகளை பார்ப்பதற்கு முன் - இப்பதிவு எழுத காரணமாக இருந்த பதிவிலிருந்து ஒரு சிறு பகுதி. கோவி.கண்ணனின் பதிவிலிருந்து.

"கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக் கடன், வளர்த்தக் கடன் பச்சையாகச் சொல்லப் போனால் மனைவியிடம் படுத்தக் கடன் என்று ஏகப்பட்ட கடன்களோடு தான் வாழ்கிறோம், அது தவிர மிகவும் தேவையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான், கடன் வாங்குவது கேவலமான, மானக் கேடான பிழைப்பு இல்லை, ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும்,

இந்த நேர்மையை நம்பித்தான் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன, அவ்வாறு நேர்மை தவறியவர்களிடம் வசூலிக்க தான தண்டத்தையெல்லாம் பயன்படுத்துகின்றன, அவர்களின் வழிமுறைகள் தவறாக இருந்தாலும் கொடுத்த கடனை மீட்பதற்கு அவர்கள் நேர்மையற்றவர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார். அவர் சொன்னது சரியாக இருந்தாலும் - மனிதர்களால் சில விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அவை என்னவென்று பார்ப்போம். என்னை பொறுத்தவரை கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஆனால் அப்படி வாழ முடியாத சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது ஒரு வருத்தமான உண்மை. சம்பாதித்து நமக்கு தேவையானதை வாங்கியது நம் தந்தையின் காலம். ஆனால் இன்று ஒரு பொருளை கடனுக்கு வாங்கி கொண்டு பிறகு சம்பாதித்து அடைக்க துவங்குகிறோம். இது யதார்த்த நிலை. கடன் யாரெல்லாம் வாங்கலாம், யாரெல்லாம் வாங்கக்கூடாது என்று பிரிக்கலாம்.

 மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் கடன் வாங்கலாம் தவறில்லை. எதிலும் நாணயமற்று முன், பின்னாக இருப்பவர்கள் கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்று. ஆனால் தொழில் செய்ய கடன் வாங்குவது தவிர்க்க இயலாது. சுய தொழில் செய்ய கொடுக்கும் அளவு எல்லோர் வீட்டிலும் நிதி நிலை இராது. இந்த பதிவு அவர்கள் குறித்தல்ல."நாம் எந்த மாதிரியான ரகத்தை சேர்ந்தவர்" என்பது நமக்கு நன்றாக தெரியும் தானே. எந்த ரகம் என்று பார்த்து கடன் வாங்குவது நன்று.

பெரும்பாலும் "வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்ற எவரும் நினைப்பதில்லை" ஆனால் சூழ்நிலைகளே நம் நம்கத்தன்மையை சோதிக்கும். அந்த சூழ்நிலைகளை சாக்கு போக்கு சொல்லாமல் வென்று கடனை அடைப்பவர்கள் கடன் வாங்கலாம். பத்தாயிரம் ரூபாய மாத வருமானம் பெறும் ஒருவர் - மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் கடனை அடைக்க ஒதுக்க வேண்டும் என்பது திட்டம். வீட்டு வாடகை, குடும்பச் செலவு என்று எல்லா செலவும் போய் மீதமாகும் இரண்டாயிரத்தை கடன் அடைக்க வைத்து கொள்கிறார்.

எல்லா மாதங்களும் பிரச்சனைகள் வராமல், திட்டமிட்டப்படி இருக்க இயலாது. குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவம் போன்ற திடீர் செலவுக்கு எதில் கைவைப்பார். வாடகை பணத்தை தொட முடியாது. வாடகை கொடுக்காமல் வீட்டில் இருக்க முடியாது. கடன் பாக்கி கொடுக்க வேண்டிய பணத்தை எடுக்கலாம். பிறகு ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்று நினைக்கலாம். கடனை அடைக்க சாப்பிடாமல் இருக்க முடியுமா என்கிற கேள்வி எழும். நிச்சயம் நேர்மையாளன் - சாப்பாட்டில் ஐம்பது சதவித செலவை குறைத்து கடனை கட்ட முயல்வான்.

கட்டுப்பாடில்லாதவர்கள், திட்டமிடல் இல்லாதவர்கள் வேறெங்கும் கடன் கிடைக்குமா என்று பார்ப்பார்கள். அப்படி ஒரு சிறு பள்ளத்தை மூட, இன்னொரு பெரிய பள்ளத்தை தோண்டி அந்த பள்ளத்திலிருந்து மீள முடியாமல் போன ஒருவரின் கதை இது. பதினைந்து வருஷம் முன்பு நடந்தது. அவர் முதலில் வாங்கியதென்னவோ ஆயிரம் ரூபாய் தான். "உங்களுக்கு தெரிஞ்சவர் தானே. அவர்க்கிட்ட ஒரு ஆயிரம் ரூபாய வாங்கி கொடுங்க" என்றார் நண்பர். பணம் தருபவரும் நண்பர் தான். ஆனால் அவர் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர் இல்லை. ரெம்பவும் தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுப்பார்.

இருவருமே நண்பர்கள் என்பதால் - இரண்டு பேரிடமும் நல்ல பிள்ளை என்று பேர் வாங்க வேண்டுமே என்று சிபாரிசு செய்தேன். ஆயிரம் ரூபாய்க்கு எண்ணூத்தி ஐம்பது ரூபாய் கொடுப்பார்கள். தினசரி பத்து ரூபாய் கொடுக்க வேண்டும் நூறு நாளைக்கு. "நீங்க தான் பொறுப்பு. நீங்களே ரூபாயை வாங்கி வைச்சுகங்க. நா வாரத்துக்கு நாலு நாள் ஊருல இருக்க மாட்டேன்" என்றார். நம் முன்னிலையில் பணத்தை பெற்று கொண்டார். பணம் வாங்கிய நண்பரின் குணம் பற்றி பத்து நாளில் தெரிந்துவிட்டது. "இவர் கடனுக்கு சரிப்பட்டு வர மாட்டார்" என்று. பணம் ஒழுங்காக தருவதில்லை. பணம் கொடுத்த நண்பரும் சற்று அஜாக்கிரதை குணம் கொண்டவர். "முன்ன பின்ன கொடுத்ததை கண்டு கொள்ளவில்லை"

பணம் கொடுத்த எழுபது நாளில், எழுநூறு ரூபாய்க்கு - ஐநூறு ரூபாய் தான் கொடுத்திருந்தார். பணம் கொடுத்த நண்பர் "அவர் இப்ப ரெண்டாயிரம் கேட்கிறார். முதல் தடவை கொடுத்த பணத்தை கழிச்சிட்டு கொடுக்க சொல்றார். கொடுக்கலாமா" என்று கேட்டார். அதாவது ஆயிரம் ரூபாய் என்ற சின்ன கடனை அடைக்க அவரிடமே இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார். "கொடுக்கலாமா, வேண்டாமான்னு என்கிட்ட யோசனை கேட்டீங்கன்னா - கொடுக்க வேண்டாம்னு தான் சொல்வேன். அதே சமயம் நீங்களா விருப்பப்பட்டு கொடுக்கிறதா இருந்தா கொடுங்க. நா ஜாமீன் கிடையாது" என்றேன்.

 "பரவாயில்லே. அப்புராணியா தானே இருக்கார். நானே கொடுத்துகிறேன். ஆனா ரூபாயை மட்டும் நீங்க வாங்கி வைங்க. நான் இந்த பக்கம் வரும்போது வாங்கிக்குவேன்" என்றார். இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் வாங்கியவர் - தினசரி என்னிடம் தர வேண்டிய ரூபாயை தராமல் "அவர்க்கிட்ட எதுக்குங்க நான் தரணும். உங்கக்கிட்ட தானே வாங்கினேன். உங்கக்கிட்டயே தரேன்" என்றாராம். காரணம் கோபம். பணம் கொடுக்க முட்டுக்கட்டை போட்டதால். பணம் கொடுத்தவரிடமும் சரி, பணம் வாங்கியவரிடமும் சரி - அவர்கள் கொடுக்கல் வாங்கல்களை தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

சரியாக ஒரு வருஷம் கழித்து என்னை தேடி வந்தார்கள் - பஞ்சாயத்துக்கு. ஆயிரம் ரூபாயில் துவங்கிய கடன் - ஒரு வருஷத்தில் இருபதாயிரம் என்கிற அளவு வளர்ந்திருந்தது. 1000 ரூபாயை அடைக்க 2000 வாங்கியவர் பிறகு அதை அடைக்க 5000 வாங்குகிறார். பிறகு 10,000, கடைசியாய் 20,000 வாங்கி கட்ட முடியாமல் விழிக்க - கணக்கு போட்டு அவர் சொன்ன தொகையை தர முடியாது என்று இவர் மறுக்க - கடைசியில் அடிதடி. பணம் வாங்கியவர் "நீங்க தான் கணக்கு சரியா சொல்வீங்க" என்று சொல்ல - பணம் கொடுத்தவரோ "அவர் பணமே தராதீங்கன்னு. நான் தான் வீம்பா கொடுத்தேன்" என்றார்.

கடைசியில் பணம் வாங்கியவர் ஊரை விட்டே போய்விட்டார். அவர் சிறு தொழில் செய்தார். தொழில் முதலீடாக பெற்ற தொகையை குடும்ப செலவு செய்ததன் விளைவே - இந்த நிலை. நிச்சயம் கடன் வாங்குவது விளையாட்டல்ல. நிச்சயம் கடன் வாங்கியவர்கள தங்கள் வாழ்க்கையை பிரிக்க வேண்டும். கடன் வாங்குவதற்கு முன், வாங்கியதற்கு பின் என்று. கடன் வாங்கியதற்கு பின் நம்மை ஒரளவேணும் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாய் -​கடன் வாங்குவதற்கு முன் நாம் அதீத செலவாளியாக இருந்தால் - கடன் வாங்கியதற்கு பின் அதை மாற்றி கொள்ள வேண்டும்.

நம் அரசுகளை போல கடனை வாங்கி ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யாமல் இலவசங்களுக்கு ஒதுக்குவது போல - கடனை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செய்யாமல் விட்டால் கடன் நம்மை அழித்து விடும் என்பதே கசப்பான உண்மை. .


தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

  1. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன், கடனுக்காக சிபாரிசு செய்வது நபர்களின் நம்பகத்தன்மை பொறுத்தது. என்கிட்ட கடன் கேட்பவர்கள் 10 ஆயிரம் கேட்டால் 500 ரூபாய் கொடுத்துவிட்டு மறந்துவிடுவேன். எதோ இல்லேன்னு சொல்லாமல் கொடுக்கும் வாராக் கடன் பட்டியலில் சென்றுவிடும். கொடுக்க முடியாதவர் என்றால் திரும்பவும் கேட்கவும் மாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். நன்றி கோவி.கண்ணன் கருத்துரைக்கு.

      Delete
  2. மீட்டர் வட்டி, தண்டல் வட்டி, ராக்கேட் வட்டி, கிரிடிட் கார்ட் வட்டி, போன்ற கடன்களில் சிக்கி அவஸ்தை படுபவர்களை அனுபவங்களை தினசரி பார்த்திருக்கிறேன். பதிவில் சொன்னது நூற்றுக்கு நூறு சரி.
    கடன் வாங்குபவர்கள்.
    1) தனிநபர்கள், எதற்காக கடன் வாங்குகிறோம் என்பதை புரிந்து கொண்டு, கடன் திருப்பி தரும் தகுதி வசதி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்
    2) தொழில் முனைவோர், சரியாக முன்திட்டமிட்டு, செய்யும் தொழிலை மேம்படுத்துமா, வருமானம் வருமா, வருவதில் வட்டியை கட்ட முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.

    இந்த விஷயங்களை மார்வாடிகளிடம் கொஞ்சம் கற்றுகொண்டால் நலல்து.

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவது 100 % உண்மை. கடன் வாங்கி, வாங்கி,.... ஊரை விட்டு போகும் நிலைமைக்கு வந்து விடுகிறது... மற்றவர்களிடம் கடன் கேட்கவே கூசப்பட வேண்டும்.. இல்லையென்றால் முடிவில் நீங்கள் கூறியது போல கடனே அவர்களை அழித்து விடும்.

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 2)



    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  4. "கடன் வாங்குவது கேவலமான, மானக் கேடான பிழைப்பு இல்லை,
    ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில்
    செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும்,"

    சத்தியமான வார்த்தை, அருமையான பதிவு.

    ReplyDelete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails