.................................... .................................... ........................................................................ ....................................தமிழர்களே வாருங்கள்..................................... ........................................................................ ........................................................................

October 17, 2012

அளவா கொள்ளை அடிங்க... தப்பு இல்லை.

"அளவா கொள்ளை அடிங்க... தப்பு இல்லை" என்று யார் சொல்லி இருப்பார்கள். திருடர்களா? ஆம். ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி திருடும் திருடர்கள் அல்ல... ஓட்டை வாங்கி மக்களை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். "அளவா கொள்ளை அடிங்க... தப்பு இல்லை." என்று திருவாய் மலர்ந்திருப்பவர் முலாயம் சிங் யாதவ் தான். மேலும் சொல்கிறார். "காசை வாங்கி கொண்டு வேலை செய்து விடுங்கள்"



என்ன ஒரு கருணை. தயாள சிந்தனை. மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று அக்கறை. ஆக காசை வாங்கி கொண்டு வேலை செய்யாமல் இருக்கும், மக்களை ஏய்க்கும் திருடர்களை பார்த்து தான் அப்படி சொல்கிறார் போலும். அவர் பேசிய பேச்சு. "நான், உங்களிடம் (கட்சியினர்) பல முறை சொல்லி விட்டேன். கொஞ்சமா சம்பாதிப்பது தப்பில்லை; ஆனா, வேலை நடக்கனும். நம்ம அரசு மீது, யாரும் கை நீட்டி, குற்றம் சொல்லிடக் கூடாது. பார்த்துக்குங்க,'' என்றார்.

இவ்வண்ணமே, நாற்பது வருஷத்துக்கு முன்பே தலைவர் கலைஞர் "தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்" என்று இலக்கிய நயம்பட பேசினார். தி.மு.க .,வின் அந்நாளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, "அரசியல்வாதிகள், 10 சதவீதம் கமிஷன் வாங்கலாம் அல்லது அடிக்கலாம். அது தப்பேயில்லை; அது அவர்களது உரிமை' என, பொதுக்கூட்ட மேடையிலேயே துணிச்சலாக எடுத்துரைத்தவர். அந்த, பத்து சதவீத கமிஷன் என்பது, 40 ஆண்டு பரிணாம வளர்ச்சியில், நாற்பது முதல், ஐம்பது சதவீதம் என ஆகி 1,70,000 கோடியில் வந்து நிற்கிறது..

அளவாக கொள்ளை அடித்தால் தப்பிக்கலாம். நிறைய கொள்ளை அடித்தால் ஒழித்து வைப்பதும் கடினம். மாட்டியும் கொள்வோம் என்பதால் அரசியல்வியாதிகள் அளவாக கொள்ளை அடிக்க சொல்கிறார்களோ என்னவோ. இல்லையென்றால் கிரானைட் மலை முழுங்கி மகாதேவன்கள் கதை தான் இல்லை அம்மாவை போல பதினாறு வருஷமாய் நீதிமன்றத்துக்கு அலைய வேண்டியது தான். முலாயம் சிங் யாதவ் அப்படி பேசினார் என்றால் அவரது அருமை தம்பி சிவபால் யாதவ் பேசிய பேச்சு எப்படி என்று பாருங்கள்.

அண்ணனுக்கு தப்பாமல் பிறந்த தம்பி. பதினாறடி பாய்ந்துள்ளது. ஏன் குடும்பத்திலுள்ள அனைவரும் அரசியலுக்கு வர, லெட்டர் பேட் கட்சி உட்பட எல்லா கட்சிகளிலும் போட்டி போடுகிறார்கள் என்பது புரியும். மக்கள் சேவையாவது. மண்ணாங்கட்டியாவது. அகிலேஷ் யாதவ் மாநில முதல்வர், அப்பா முலாயம் சிங் யாதவ் கட்சி தலைவர், சித்தப்பா சிவபால் யாதவ் மாநில அமைச்சர், அகிலேஷ் மனைவி எம்.எல்.ஏ.., தி.மு.க., தலைமையை தூக்கி சாப்பிட்டுவிட்டது முலாயம் சிங் யாதவ் குடும்பம். சிவபால் சிங் யாதவ் பேசிய பேச்சை பாருங்கள்.

"நீங்க சம்பாதிங்க... நான் வேண்டாம்னு சொல்லலை... ஆனா, கொஞ்சமா காசு பாருங்க... மொத்தமா கஜானாவை சுரண்டீராதீங்க...' என்றார். எவ்வளவு சுரண்டினாலும் அதிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். இவர் அகிலேஷ் சிங், தலைமையிலான சமாஜ்வாதி அரசில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர், பொதுப்பணித்துறை என்றால் சொல்லவா வேண்டும் வருமானத்துக்கு. இவர்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் எப்படி நேர்மையுடன் இருக்கக்கூடும்.

இவர்கள் நல்ல விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்களோ இல்லையோ கொள்ளையடிக்க முன்னோடிகள் தான். நாட்டில் புரையோடி விட்ட லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் - முதலில் தலைமை பதவியில் இருந்து ஒழுக்கம் வர வேண்டும். "காசை வாங்கி கொண்டு வேலை செய்து விடுங்கள்" என்பது சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்ய சொல்லப்பட்டதல்ல. அவர்களின் கடமையை செய்ய சொல்லப்பட்டது. சம்பளம் வாங்கி கொண்டு எந்த வேலையை செய்யாமல் இருக்கிறார்களோ - அந்த வேலையை செய்ய சொல்வது. அலுவலகத்துக்கு போவது சம்பளம் வாங்க மட்டுமே. அதற்கு மேல் வேலை, வெட்டி செய்ய தனியாக வேண்டுமாம். ​

முலாயம் சிங் யாதவ் இப்படி என்றால் காங்கிரஸின் மத்திய எக்குத்துறை அமைச்சர் பிரசாத் வர்மா - சல்மான் குர்ஷித் மீது 71 லட்சம் ரூபாய் முறைகேடு என்று சொன்னதற்கு - "மத்திய அமைச்சர்களுக்கு 71 லட்ச ரூபாய் எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. 71 கோடி ரூபாய் என்றால் தான் பெரிய விஷயம்" என்று கூறி இருக்கிறார். அவனவன் "ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி" என்று அடிக்க - எங்கள் சல்மான் குர்ஷித் வெறும் 71 லட்சமே முறைகேடு செய்து சோனியா காங்கிரஸையே கேவலப்படுத்திவிட்டது என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

போகிற போக்கை பார்த்தால் - சல்மான் குர்ஷித் போன்ற சின்ன சின்ன முறைகேடு குற்றங்களை - சி.பி.ஐ மற்றும் நீதிமன்றங்கள் போன்றவை குற்றமாகவே பாவிக்காதோ. அத்தகைய குற்றங்கள் விசாரிக்க தேவையே இல்லை என்கிற நிலை வந்து விடுமோ. சொல்ல முடியாது. இந்தியாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. அளவா கொள்ளை அடிச்சா பரவாயில்லை என்கிற மன நிலைக்கு வந்திவிட்டோம்.பதிவு நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி முரளிதரன் .

      Delete

தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.

கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails