அரசு அலுவலர்கள் எவரேனும் - தினசரி லஞ்சம் வாங்கி பிடிபடும் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காக லஞ்சம் வாங்காமல் தங்களை திருத்தி கொள்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். "கிறுக்குப்பய மாட்டிக்கிட்டான். மாட்டாம்ம வாங்குறதில் தான் சாமர்த்தியமே இருக்கு" என்று சாமர்த்தியமாக வாங்க துவங்குகிறார்கள். ஒருவரின் உழைப்பை - தமக்கு அன்னியமான ஒரு பொருளை அபகரிக்கிறோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் வாழ்கிறார்கள்.சட்டத்தை மீறும் ஒருவனிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதையே சட்டத்தை மதிக்கிற, சட்டப்படி நடக்கிறவரிடமும் எதிர்பார்க்கிறார்கள். எல்லோரும் எரிச்சலுடன் லஞ்சத்தை கொடுத்து விடுகிறவர்கள் அல்ல. மாட்டிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் விஷயத்தில் பாலின வேறுபாடில்லை. "பொம்பளைங்கன்னா இளக்காரம்மா" என்று பெண்களும் அசராமல் வாங்குவதை பார்க்கிறோம். பாவம், எல்லோருக்கும் தேவைகள் இருக்கிறது தானே.
"லஞ்சம் வாங்கி பிடிபடும் அதிகாரிகள் குறித்த செய்தி" மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பனவாக தான் உள்ளது. காரணம் ஒவ்வொரு பொதுஜனமும் ஏதாவது ஒரு வகையில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் லஞ்சம் வாங்கி சிக்கியவர்களில் சில சாதனைகளும் புரிந்திருக்கிறார்கள். அந்த விபரம். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பொறுத்தவரை, சில ஆண்டுக்கு முன், எட்டரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய, சென்னை இ.எஸ்.ஐ., பெண் இயக்குனர் எழிலரசியை கைது செய்ததே அதிகபட்சத் தொகையாக இருந்தது.
அதே போல சென்னையில் உள்ள மத்திய சுங்கத்துறை இயக்குனர் ராஜன், இரண்டரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிப்பட்டதே, சி.பி.ஐ., போலீஸாரின் சமீபத்திய சாதனையாக உள்ளது. இந்நிலையில், வருவாய்துறையை பொறுத்தவரை, திருச்சியை சேர்ந்த தாசில்தார் சண்முகதுரை, 4 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று கைதாகி, புதிய சாதனையை படைத்துள்ளார். லஞ்சம் வாங்காமல் பணி செய்தாலும் இன்றைய சூழ்நிலையில் அது சாதனை தான் - அவரவர் அளவுக்கு. தாசில்தார் சண்முகதுரை லஞ்சம் வாங்கி பிடிபட்ட கதை.
ஒருவர் சிக்கிவிட்டால் - அவரிடம் கறக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டி கொண்டு அலையவிட்டு, அல்லோலப்பட விடும் அரசு அலுவலர்கள் ... தாசில்தார் பிடிபட்ட கதையே தினமலர் விவரிக்கிறது.
நான்கு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்சி முத்திரைத்தாள் தாசில்தாரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, புத்தூர் அருணா நகரைச் சேர்ந்தவர் சண்முகதுரை, 53. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாநிலச்செயலாளரான இவர், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் தாசில்தாராக பணிபுரிந்தார்.திருச்சி, திருவானைக்காவல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் முரளிதரன், 44. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், மூன்று மாதத்துக்கு முன், திருச்சி சமயபுரம் அருகே மாடக்குடி கிராமத்தில், 7.66 ஏக்கர் நிலம் வாங்கினார். நிலத்தை பத்திரப்பதிவு செய்ய, லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அவர்கள், நிலத்தை காலிமனையாக கருதி, சதுரடி வீதம் கணக்கிட்டு, காலிமனை முத்திரைக் கட்டணமாக, 30 லட்ச ரூபாய் கட்டவேண்டும் என்றனர்.
"நான் வாங்கியது விவசாய நிலம். அதில், 195 தென்னை மரம், 95 பனைமரம், விவசாய பாசன கிணறு மற்றும் இலவச மின் மோட்டார் இணைப்பும் உள்ளது' என்று முரளிதரன் எடுத்து கூறினார். "விவசாய நிலம் என்ற சான்றிதழ் பெற்றால், விவசாய நிலத்துக்குரிய முத்திரைக்கட்டணம், எட்டு லட்ச ரூபாய் செலுத்தினால் போதும்' என்று, சார்பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர். முரளிதரன், விவசாய நிலம் என்று, சான்றிதழ் பெற்றார். அந்த சான்றிதழை, லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தாசில்தார் சண்முகதுரை, "நான்கு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் அனுப்ப முடியும். இல்லையென்றால் அனுப்பமாட்டேன்' என, கறாராக தெரிவித்தார்.

பணம் கொடுக்க விருப்பாத முரளிதரனை, ஒன்றரை மாதமாக, "காலை வா, மதியம் வா' என, அலையவிட்டார். விரக்தியடைந்த முரளிதரன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சிலம்பரசனிடம் புகார் கொடுத்தார். அவரின் அறிவுரைப்படி, லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட முரளிதரன், நேற்று காலை சண்முகதுரையின் வீட்டுக்கு சென்று, நான்கு லட்ச ரூபாய் கொடுத்தார். அவருக்கு பின்னால் திடீரென வீட்டுக்குள் புகுந்த, டி.எஸ்.பி., தலைமையிலான, பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சண்முகதுரையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து, நான்கு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வீட்டில் இருந்த கணக்கில் வராத, 150 பவுன் நகை மற்றும் ஏராளமான சொத்துப்பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடுமையாக உழைத்தும் கூட, நியாயமான ஊதியம் பெற முடியாத மக்கள் ஒரு புறம். உழைப்பில்லாமல் அடித்து பிடுங்கும் கும்பல் ஒரு புறம்...
லஞ்சம் - திருட்டை விட மோசமானது, விபச்சாரத்தை விட கேவலமானது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உரைக்க வேண்டும். ஊழல் புகாரில் சிக்கும் அரசியல்வாதிகள், "இது எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டு" என்று புன்னகைத்தவாறே புளுகும் இழிநிலை மாறாத வரை அடிமட்ட லஞ்சம் ஒழிய போவதில்லை.

குறிப்பு : அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரை எங்கு எப்படி புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளம் தெளிவாக தெரிவிக்கிறது.
இணைய தள முகவரி : http://www.dvac.tn.gov.in/
மேற்கூறிய தகவல் உதவி விண்மணி.காம்
0 comments:
Post a Comment
தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.
கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.