தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட அப்பா கொடுக்கும் காசுகளை சேர்த்து வைத்து - புத்தகங்கள் வாங்கி படிக்கிற பழக்கம் பதினைந்து வயதில் துவங்கியது. முதலில் வாங்கி படித்த புத்தகங்கள் என்றால் காமிக்ஸ் மற்றும் பத்து படங்களின் பாடல்களை ஒரே புத்தகமாக போட்டு வெளி வரும் பாட்டு புத்தகம். கொஞ்ச நாளிலேயே அவை அலுப்பு தட்ட, அந்த சமயத்தில் பாலகுமாரன் பிரபலமடைந்தார்.பாலகுமாரன் எழுதும் மாத நாவல்களை தேடி படிக்க துவங்கினேன். அந்த காலத்தில் அப்பா வாங்கி படித்து பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஜெயகாந்தன் கதைகளை வாசிப்பதும் - பிடித்தமான பல விஷயங்களில் ஒரு விஷயமாயிற்று. பாலகுமாரனின் எழுத்து ஆன்மீக தளம் பக்கம் செல்ல, அந்த சமயம் பிரபஞ்சன் எழுத ஆரம்பித்தார். பாலகுமாரனை விடுத்து பிரபஞ்சனை வாசிக்க துவங்கினேன்.
அவர் குறைவாக எழுதினாலும், அவரை படிப்பது தொடர்ந்தது. கல்கி வார இதழை தொடர்ந்து வாசித்தமையால், அதில் நிறைய எழுதிய மேலாண்மை பொன்னுசாமி - பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆனார். கல்கி சிறுகதை போட்டியில், அவர் பரிசு வென்ற "அரும்பு" சிறுகதை - என்றென்றும் மறக்க இயலா கதை. அந்த சமயத்தில் எனக்கும் எழுத தோன்ற - தினமணிக்கதிர் மற்றும் கல்கியில் நிறைய அனுப்பியதில், ஓரளவுக்கு கதைகள் பிரசுரமாகின. ஒரு பக்கம் இலக்கிய கதைகளை தேடி வாசிப்பது தொடர்ந்தது.
நாவல் முயற்சிக்கு முயன்று தோற்றதால் - கதை எழுதுவதையும் நிறுத்தி கொண்டேன். எழுதுவதில் ஏற்பட்ட தேக்கத்தால் - புத்தகம் வாங்கி படிக்கும் ஆர்வமும் குறைந்து போனது. வேலையின்மை, பொருளாதார சூழலும் ஒரு காரணம் தான். அப்போது நம் சிறுகதைகளை - நூலாக கொண்டு வர, பதிப்பகம் ஒன்றை அறிமுகப்படுத்தினார் ஒரு பத்திரிகை துணையாசிரியர். வெளியிடுவற்கான சூழல் அப்போது நமக்கு இல்லாததால் மறுத்து விட்டேன்.
இப்போது இணையத்திலேயே தேவையானதை வாசித்து விட முடிகிறது. ஆனால் வருஷா வருஷம் புத்தகக்கண்காட்சிக்கு செல்ல தவறுவதில்லை. சும்மா ஒரு ரவுண்டு. எழுத்தாளர்கள் பலரை பார்க்க முடிகிற வாய்ப்பு. கடைசியாக வெளியேறுகையில் வந்ததற்கு அடையாளமாய் சொற்ப விலையில் ஒரு புத்தகம். ஏதோ நம்மால் முடிந்தது. இருக்கிறவர்கள் வாங்குகிறார்கள். இல்லாதவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.நிறைய வாசிக்க துவங்கியது இணையத்தில் தான். மானசீகமாய் போற்றீய பல தலைவர்களின் முரண்பாடுகளை கண்ணுற்ற துவங்கியது இணைய வாசிப்பிற்கு பிறகே. எத்தனை எத்தனை முரண்பாடுகள். சாதி வெறி, மத வெறி பற்றி பேசுவதில் பகுத்தறிவு - எந்தளவு தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை அறிய அருமருந்தாக இருந்தது இணையமே. நமக்கு விருப்பமானதை மட்டும் தேடி தேடி படிக்கும் போது விருப்பமானவற்றின் மறுபக்கமோ, அவைகளின் விஷமத்தனங்களோ நமக்கு தெரியாது.
நமக்கு பகுத்தறிவு உணர்வு கருத்தை ஊற்றிய நண்பர் - ஒரு சார்பான கருத்தையே நம் முளையில் திணித்தார். இணைய வாசிப்பில் - நிறைய வாசிக்கிற வாய்ப்பு கிடைக்க "உண்மை எது, பொய் எது" என்பதை உணர முடிந்தது. இணைய வாசிப்பு நம் கண்களை திறந்தது என்று சொல்லலாம். பணம் கொடுத்து நூல்கள் வாங்கி இவ்வளவையும் தெரிந்து கொள்வது என்பது முடியாத விஷயம்.
புத்தகக்கண்காட்சி குறித்து ஒரு முற்போக்காளர் எழுதி இருந்தார். . "இலட்சக்கணக்கில் விற்பனையாகும் விவேகானந்தரின் போதனைகளோ, காந்தியின் சத்திய சோதனைகளோ, கல்கியின் பொன்னியின் செல்வன்களோ, யோக - தியானக் கலைகளோ, உடல் நல - ஆரோக்கிய நூல்களோ, சுயமுன்னேற்ற நூல்களோ, நியூமராலஜி - பக்தி இலக்கியங்களோ அல்லது உயிர்மை - காலச்சுவடுகளின் 'தீவிர' இலக்கியங்களோ சமூகத்திற்குத் தேவையான பாரதூரமான மாற்றங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை. "என்று தொடர்கிறார்.
"மற்றொருபுறம் சமூகத்தில் கேடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகின்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்களே ",என்று புத்தக கண்காட்சி குறித்து எழுதினாலும் - பலரும், சந்தடி சாக்கில் இந்திய இறையாண்மை, ஜனநாயகம் போன்றவற்றை பழித்து மார்க்ஸியம், லெனினிஸியம் என்று உளறி கொட்டி, வாசிப்பாளர்கள் எதை வாங்க வேண்டும் என்கிற கருத்தை விதைக்க முயல்கிறார்கள். அவர்கள் அப்படி பழிப்பது ஒன்றும் அதிசயமல்ல.
மக்களோ, வாசிப்பாளர்களோ புத்திசாலிகள். எதை வாசித்தால் உருப்படியாக இருப்போம் என்று அறிந்தவர்கள். லெனினின் விளம்பர பதாகையை கூட வெறுக்கிற மக்களும் இந்த பூமிப்பந்தில் ஒரு பகுதியில் இருக்கிறார்கள் என்பதை உணராமல் - காலாவதியான மருந்தை அல்லது உடலுக்கு ஒவ்வாமையாகும் மருந்தை, இந்திய நோயாளிக்கு பரிந்துரைப்பது எந்த விதத்தில் நியாயம். மாக்சிம் கார்க்கியின் "தாயை" படிப்பதற்கு "சத்திய சோதனையை படிக்கலாம்". பாதகமில்லை.

நிச்சயம் கல்கியின் பொன்னியின் செல்வனாலோ, காலச்சுவடு மற்றும் உயிர்மை வெளியீடுகளாலோ, நியூமராலஜி நூல்களாலோ - ஒரு போதும் இந்த நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாது. ஆனால் முற்போக்காளர்கள் பரிந்துரைக்கும் நூல்களால் - இன்றில்லையேல் என்றேனும், இந்த தேசத்தின் அமைதிக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதனை சாமானியர்களும் உணருவார்கள்.
0 comments:
Post a Comment
தமிழில் இடும் பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிட இயலும்.
கருத்துகள் எதிர்மறையாக இருப்பினும், அதையும் நாகரிகமாக யார் மனதும் புண்படாதவாறு சொல்லுங்கள்.